விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகன ஓட்டுநர் உரிமம் இன்றி, வாகனத்தை ஓட்டி ஒருவரை காயப்படுத்திவிட்டு, நீதிமன்றம் விதித்த இழப்பீட்டை வழங்காதவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அழகுதேவேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி வேலம்மாள் (40). கூலி வேலை செய்து வருகிறார்.
வேலை முடித்து நூர்சாகிபுரம்-பொட்டல்பட்டி சாலையில் 14.10.2003-ம் தேதி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நூர்சாகிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (35) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் வேலம்மாள் மீது மோதி காயம் ஏற்பட்டு, இவர் சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாக வேலம்மாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார்.
வாகனம் ஓட்டி வந்த ராம்குமாருக்கு வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாமல் இருந்துள்ளது.வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரா, 21.10.09-ம் தேதி வேலம்மாளுக்கு, ராம்குமார் இழப்பீடாக ரூ.15 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். ஆனால் அவர் இழப்பீடு வழங்கவில்லை. வட்டியுடன் சேர்த்து தற்போது ரூ.24 ஆயிரம் வந்துள்ளது. இதனையடுத்து வேலம்மாள், நீதிமன்றத்தில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், 29.10.14-ம் தேதி, ராம்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் நீதிமன்ற ஊழியர்கள் ராம்குமாரைக் கைது செய்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், ராம்குமாரை இம் மாதம் 30-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.