விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் பாலம் அமைக்க நகராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் நகராட்சி குழுக்கூட்டம் கூட்டரங்கில் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் மா.சாந்தி தலைமை வகித்தார். விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், நகராட்சி ஆணையாளர் மணி(பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு: ஜெயக்குமார்: நகராட்சியில் உள்ள தேசபந்து மைதானம் நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ள இடம் எனக்கருதி நிறைய பேர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அதனால், நகராட்சி குழுவின் ஒப்புதல் இல்லாமல் நெடுஞ்சாலை பராமரிப்பில் ஒப்படைக்க கூடாது. அதற்கு பதிலாக ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைவரும் பயன்படும் வகையிலும், நகராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் கலையரங்கம் அமைக்க வேண்டும் என்றார்.
பாட்சா ஆறுமுகம்: மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பின் படி ராமமூர்த்தி சாலையில் அப்பகுதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்டு மேம்பாலம் அல்லது சுரங்க வழிப்பாதை மேற்கொள்ள ஆறு வாராத்திற்குள் முடிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ராமமூர்த்தி சாலையை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கும் வகையில் தீர்மானம் வேண்டும் என குறிப்பிட்டுள்ளன. அதற்கு முன்னதாக அக்குறிப்பிட்ட இடத்தில் என்ன பாலம் அமைய இருக்கிறது என்பது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு எதுவும் கேட்கவில்லை. அதனால் மேம்பாலம் என்பதை நீக்கிவிட்டு, பாலம் அமைக்க தீர்மானம் என குறிப்பிட வேண்டும் என்றார்.
நாகேந்திரன்: மாத்தநாயக்கன்பட்டி சாலையில் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்கு ஒப்பந்தப்பணிகள் விட்டு இதுவரையில் பணியை தொடங்கவில்லை. அதனால் விரைவில் தொடங்க வேண்டும் என்றார்.
கஜேந்திரன்: நகராடசியில் பெயர் மாற்ற சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ் உள்ளி்ட்டவைகள் வழங்குவதற்கான மனுக் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. இனிமேல், மனுவை பெற்றுக் கொண்டவுடன் ரசீது வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு தலைவர் மா.சாந்தி பதில் அளித்து பேசுகையில், நகராட்சி அனுமதியில்லாமல் நெடுஞ்சாலைத்துறையிடம் தேசபந்து மைதானம் ஒப்படைக்கப்படாது.
ராமமூர்த்தி சாலையில் பாலம் அமைக்க உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாத்தநாயக்கன்பட்டி சாலையில் கழிவுநீர்வாய்க்கால் அமைப்பதற்கு இன்னும் 10 நாள்களுக்குள் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெயர் மாற்ற சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவை குறிப்பிட்ட நாள்களுக்குள் வழங்கும் படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், இக்கூட்டத்தில் நூற்றாண்டு விழா சிறப்பு நிதி மூலம் பணிகள் மேற்கொள்ளுதல், ராமமூர்த்தி சாலையில் பாலம் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் அனைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இதில், நகராட்சி குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக நகராட்சி துணைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.