அருப்புக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து கத்தியால் குத்தி மாணவன் படுகொலை

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து 8-ம் வகுப்பு மாணவனை
Updated on
2 min read

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து 8-ம் வகுப்பு மாணவனை முகத்தில் பலமுறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலையில் ஈடுபட்ட முன்னாள் மாணவரை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே அயன்கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோபால்-தேவி தம்பதியின் மகன் பாஸ்கரன்(14). இவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் மாரீஸ்வரன்(19). இதே பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்2 வரையில் படித்து இடையிலேயே நின்று கொண்டாராம்.

இந்நிலையில், அவ்வப்போது மாணவர்களை அழைத்து மாந்தீரிக வித்தைகள் செய்து பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று வருவராம். அதேபோல், கடந்த  8 மாதங்களுக்கு முன்பு பாஸ்கரன் உள்ளிட்ட அதே பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேரை ஏமாற்றி திருசெந்தூருக்கு கடற்கரைக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு மயக்க மருந்து கொடுத்து அங்கேயே விட்டுவிட்டு வந்ததாகவும், தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.  இதில், அங்கிருந்து பாஸ்கரன் தப்பி வந்து கிராமத்தினரிடம் நடந்த விவரங்கள் தெரிவி்த்தாரம். அதைத் தொடர்ந்து இது தொடர்பாக மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாம். 

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து கிராமத்தினர் கண்டித்துள்ளனர். இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து மாரீஸ்வரன் கொலை செய்யாமல் விடமாட்டேன் என பாஸ்கரனை அவ்வப்போது மிரட்டியதோடு நோட்டம் விட்டு வந்தாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் பேருந்தில் அயன்கரிசல்குளத்தில் இருந்து பந்தல்குடி பள்ளிக்கு பாஸ்கரன் வந்து, வகுப்பறையில் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது, காத்திருந்த பழைய மாணவர் மாரீஸ்வரன் சுற்றுச்சுவர் ஏறி குதித்து வகுப்பறைக்குள் வந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாஸ்கரன் வயிறு மற்றும் முகத்தில் பல்வேறு இடங்களில் குத்தியும், வெட்டியும் உள்ளார்.  இதனால் மாணவரின் அலறல் சத்தம் கேட்டு சக மாணவர்கள் வருவதற்குள் சுற்றுச்சுவர் ஏறி குதித்து தயாராக இருந்த ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி மாரீஸ்வரன் தப்பினாராம்.

அதையடுத்து படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாஸ்கரனை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்த அறிந்த ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு, அரசு மேல்நிலைப்பள்ளியில் சம்பவம் நடந்த வகுப்பறையை பார்வையிட்டு தலைமையாசிரியர் சம்சுதீனிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

மறியல் போராட்டம்: இதையடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு திரண்ட அயன்கரிசல்குள கிராம மக்கள் மாணவனை குத்தி கொலை செய்த முன்னாள் மாணவரை உடனே கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த எஸ்.பி. கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமதானம் செய்து வைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தப்பியோடிய முன்னாள் மாணவனை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கொலை செய்வதற்கான காரணம் குறித்தும், பழைய மாணவரின் நடவடிக்கைகள் குறித்து பெற்றோர், பள்ளி தலைமையாசிரியர், மாணவர்கள், கிராம மக்களிடம் தீவிரமாக விசாரணை செய்ததில் மனநிலை சரியில்லாத மாணவராகவும், மாந்தீரிகம் செய்கிறவராகவும்  இருந்துள்ளார் என்பது தெரியவருகிறது. தப்பியோடிய பழைய மாணவரை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இது தொடர்பாக பந்தல்குடி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.  

பெட்டிச் செய்தி: கடந்த 26-ம் தேதி கோபாலின் தாயார் உயிரிழந்துள்ளார். இதற்காகவே மும்பையில் இருந்து வியாழக்கிழமை வந்ததும் அடக்கம் செய்துள்ளனர். அதனால் மாணவர் வீட்டில் இருந்துள்ளார். அதற்குள் அவரது தாயார் தேவிதான் பள்ளிக்கு செல்ல மறுத்த நிலையில், போய்வரும் படி வலியுறுத்தினாராம். அதன் அடி்பபடையிலேயே காலையில் முதல் பேருந்தில் ஏறி, பள்ளிக்கு வந்துள்ளார். அதற்குள் அரை மணிநேரத்திற்குள் உயிரிழந்து விட்ட தகவல் வந்துள்ளது. நேற்றுதான் துக்க நிகழ்ச்சி நடந்த நிலையில், இன்றும் துக்கநாளாக ஆகிவிட்டதே என  பெற்றோர்கள் கதறி அழுததை பார்த்து கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும், கோபால் கூறுகையில் கடத்தப்பட்ட போதே பழைய மாணவர் மீது  கொடுத்த புகாரை மாசார்பட்டி போலீஸார் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் எங்கள் மகனை இழந்திருக்கமாட்டோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com