திருநெல்வேலி மாவட்ட அணைகளில் 78.6 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் நீர்இருப்பு 39.55 சதவிகிதமாகதான் இருந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், 2,218 குளங்களும் நிரம்பியுள்ளதால் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை உற்பத்திக்குழுக் கூட்டம், வேளாண்மை இணை இயக்குநர் சந்திரசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டத்தில் வளமையான மழையளவு 814.80 மி.மீ. ஆகும். இந்த ஆண்டில் இம் மாதம் இதுநாள் வரை 1166.78 மி.மீ. மழை கிடைக்கப்பெற்றுள்ளது. 2013 ஆம் ஆண்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் முறையே 57.01, 256.66 மி.மீ. மழைதான் கிடைத்தது. ஆனால் இந்த மாதங்களில் நிகழாண்டில் முறையே 394.39, 277.65 மி.மீ. மழை கிடைத்துள்ளது.
அதேபோல மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குப்பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு அணைகளைச் சேர்ந்து திருநெல்வேலி மாவட்ட அணைகளின் மொத்த நீர் இருப்பாக 78.6 சதவிகிதம் உள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் 39.55 சதவிகித நீர் இருப்பு மட்டுமே இருந்தது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,449 குளங்களில் 2218 குளங்கள் நிரம்பியுள்ளன. அதில் 696 குளங்களில் 3 மாதங்களுக்குத் தேவையான நீர் இருப்பும், 804 குளங்களில் 2 மாதஹ்களுக்குத் தேவையான நீர் இருப்பும், 718 குளங்களில் ஒரு மாதத்துக்கு தேவையான நீர் இருப்பும் உள்ளது. கால்வாய் வரத்துக் குளங்களில் 45 குளங்களும், மானாவாரி குளங்களில் 186 குளங்களும் இதுவரை நிரம்பாமல் உள்ளன. இம் மாவட்டத்தில் உள்ள கிணறுகளில் சராசரியாக 5 முதல் 6 மணி நேரத்துக்கு பாசனம் மேற்கொள்ளும் அளவுக்கு தண்ணீர் உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.