வகுப்பறையில் பள்ளி மாணவனை கொன்றவர் கைது

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறையில் மாணவனை  கொன்ற முன்னாள் மாணவர் மாரீஸ்வரனை அவரது உறவினர் வீட்டில் போலீஸார்  கைது செய்தனர்.
Updated on
1 min read

அருப்புக்கோட்டை அருகே வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்தி கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளி மற்றும் அவரது நண்பரை போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட அயன்கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலின் மகன் பாஸ்கர்(14). இவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்த செல்வத்தின் மகன் மாரீஸ்வரன்(19) முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை காலையில் வகுப்பறையில் அமர்ந்திருந்த பாஸ்கரனை மறைத்து வைத்திருந்த கத்தியால் பல்வேறு இடங்களில் குத்தியும், வெட்டியும் படுகொலை செய்தார். இதில் படுகாயம் அடைந்த மாணவனை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தான். இது தொடர்பாக பந்தல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே தப்பியோடிய மாரீஸ்வரனை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் பாபு மற்றும் பந்தல்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இதில் முதல் கட்ட விசாரணையில் பள்ளி வளாக சுற்றுச்சுவர் வழியாக வெளியேறி பைக்கில் தப்பியோட உதவி செய்தது யார் என்பது குறித்து விசாரித்தனர். அப்போது, கொலையாளி மாரீஸ்வரன் திருச்சுழி அருகே தமிழ்பாடியில் தனியார் நூற்பாலையில் வேலை பார்த்த விவரம் தெரியவந்தது. அங்கு வேலை செய்து வரும் தமிழ்பாடியைச் சேர்ந்த கொலையாளியின் நண்பரான மகேஸ்வரன்(33) என்பவர்தான் தப்பியோட உதவி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இரவு பணிக்குச் சென்று சனிக்கிழமை காலையில் 6 மணிக்கு முடிந்து வெளியேறிச் செல்லும் போது தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் விசாரணை செய்ததில் பள்ளி வளாகத்தில் இருந்து பைக்கில் ஏற்றி வந்து கல்லூரணியில் பேருந்து ஏற்றி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளான்.

கொலையாளிக்கு உதவிய மகேஸ்வரனை செல்போனில் போலீஸார் பேச வைத்தனர். அப்போது எதிர்முனையில் கொலையாளி மாரீஸ்வரன் எப்படி நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் செய்தி வந்ததுள்ளது என்கிற விவரம் மட்டும் கேட்டனாம். அதைத் தொடர்ந்து எங்கிருக்கிறாய் எனக்கேட்டதற்கு பதில் கூற மறுத்து செல்போன் இயக்கத்தை நிறுத்தினாராம்.

உடனே பேசிய பகுதி எது என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் ஆராய்ந்ததில் கோயாம்புத்தூர் என்பது தெரியவந்தது. அதையடுத்து, பந்தல்குடி காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை போலீஸார் மாரீஸ்வரனை பிடிப்பதற்கு கோவைக்கு விரைந்து சென்றனர். அங்கு வீரபாண்டி மாரியம்மன் கோயில் அருகே உள்ள அவரது அக்காள் வீட்டில் இருந்த மாணவன் மாரீஸ்வரனை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com