விருதுநகர் மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகர் அருகே தொடர்ந்து ஆற்றுப்பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே தொடர்ந்து ஆற்றுப்பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

    ராஜபாளையம் மேலஆவாரம்பட்டி பாரதி தெருவைச் சேர்ந்த சமுத்திரத்தின்   மகன் ஆனந்த்(24). இவர் இப்பகுதியில் உள்ள இனம்செட்டிக்குளம், அய்யனார்கோவில், முடங்கியார் ஓடை, மேற்கு தொடர்ச்சி மலை ஆற்று பகுதிகளில் எவ்வித அனுமதியின்றியும் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டாராம். இது தொடர்பாக இப்பகுதி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல், கடந்த 19-ம் தேதி மேலபாட்டம் கரிசல்குளம் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதை தடுக்க வந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சித்தாராம்.

    இதேபோல், சிவகாசி அருகே சங்கரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மகன் காளிராஜ்(39) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி(32) ஆகிய இருவரும் தொடர்ந்து வைப்பாறு பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே மூன்றுபேர் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். இதை ஆய்வு செய்த ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 3 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

     இதுவரையில் விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாரயம், மணல் கொள்ளை, ரேசன் அரிசி கடத்தல், திருட்டு வீடியோ தயாரித்தவர்கள் என மொத்தம் 24 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com