

தொழிலதிபர், சமூகசேவகர் எனப் பல முகங்களைக் கொண்ட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் வியாழக்கிழமை காலமானார். பொள்ளாச்சியில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு மக்கள், பிரமுகர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நாச்சிமுத்து கவுண்டர்- ருக்மணியம்மாள் ஆகியோருக்கு கடந்த 1923-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் தேதி மகாலிங்கம் பிறந்தார். இவர் பிரபலமான தொழிலதிபராக உருவெடுத்தார்.
இவர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை ஏ.வி.எம். ராஜேஸ்வரி மஹாலில் நடைபெற்ற வள்ளலார் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது, அவர் திடீரென்று மயங்கி விழுந்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். அவருக்கு வயது 91.
பொள்ளாச்சி நா.மகாலிங்கத்துக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், மாணிக்கம், பாலசுப்பிரமணியம், சீனிவாசன் ஆகிய 3 மகன்களும், கருணாம்பாள் என்ற மகளும் உள்ளனர். இவரது மருமகன் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் கோவையில் பிரபல தொழிலதிபர் ஆவார்.
தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் ஆவார். அவருக்கு 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.
மகாலிங்கம் பொள்ளாச்சி எம்எல்ஏவாக இருந்தபோது பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பொள்ளாச்சி பகுதிக்குப் பெற்றுத் தந்தார். காந்தியத்தை வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்த மகாலிங்கம், வள்ளலார் மார்க்கமான சமரச சுத்த சன்மார்க்க நெறிக்காக பல பணிகளைச் செய்துள்ளார். சென்னையில் காலமான மகாலிங்கத்தின் உடல் வெள்ளிக்கிழமை விமானம் மூலம் கோவை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கத்தின் பூர்வீக வீட்டிற்கு காலை 10.40 மணிக்கு கொண்டுசெல்லப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும், கவிஞர் வைரமுத்து, பொள்ளாச்சி முன்னாள் எம்.பி. சுகுமார், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முன்னாள் அமைச்சர் தாமோதரன், பொள்ளாச்சி நகரமன்றத் தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மதியம் 1.25 மணிக்கு பொள்ளாச்சி, உடுமலை ரோட்டில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில், மக்கள் அஞ்சலி செலுத்த மகாலிங்கத்தின் உடல் வைக்கப்பட்டது. அங்கு தமிழக முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், வெள்ளகோவில் சாமிநாதன், பொங்கலூர் பழனிசாமி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதுதவிர பல்லாயிரக் கணக்கான மக்கள், சக்தி குழும ஊழியர்கள், என்.ஐ.ஏ. கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் உடல் இன்று மாலை 6.45 மணியளவில், பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.