விருதுநகர் அருகே சாலையின் குறுக்கே ஆளில்லாத ரயில்வே சிராசிங்கை நிரந்தரமாக அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கூரைக்குண்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் குறுக்கே ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த கிராசிங்கை கடந்துதான் கூரைக்குண்டு, மாத்தநாயக்கன்பட்டி, குல்லூர்சந்தை, பாலவநத்தம் ஆகிய கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியும். மேலும், ஆட்சியர் அலுவலகத்திற்கும் வருவதற்கும் எளிதாக வந்து செல்லும் வகையில் சாலை உள்ளது. இந்நிலையில், ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகளில் பராமரிப்பு பணிகள் செய்வ்தாக கூறி ரயில்வே நிலைய அதிகாரிகள் தடுப்புகளை போட்டு கடந்த ஒரு வாரமாக அடைத்து வைத்துள்ளனர். இதை உடனே திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், ரயில்வே நிர்வாகத்திடம் அக்கிராம ஊராட்சியின் தலைவர் வேலாயுதம் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், கூரைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சுற்றி செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் மீண்டும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2 நாள்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் ரயில்வே நிர்வாகத்தினர் சனிக்கிழமை திறப்பதாக உறுதியளித்திருந்தனர். இதனால், திறக்க நடவடிக்கை எடுக்காமல் தடுப்புகளை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் இச்சம்பவம் அறிந்த ரயில்வே காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராவணன், சார்பு ஆய்வாளர் மோகன்தாஸ், துணை வட்டாட்சியர் கண்ணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, சூலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து முற்றுகையிட்ட கிராம மக்களிடமும், ஊராட்சி தலைவர் வேலாயுதம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, மீண்டும் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்றும், ரயில்வே கிராசிங் பாதையை உடனே திறக்க வேண்டும் எனவும் கூறினர். பின்னர் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து தான் பாதையை அகற்ற முடியும். அதனால் கிராம மக்கள் அனைவரும் மதுரை மண்டல ரயில்வே கோட்ட அலுவலரிடம் சென்று முறையிடும் படி கூறினார். அதேபோல், விருதுநகர் ரயில் நிலைய அலுவலர்களிடமும் நடந்ததை தெரிவித்து விரைவில் பாதையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.