தீபாவளி திருநாளுக்கு சில நாள்களே உள்ள நிலையில் பட்டாசு ஆலைகளில் பேன்சி ரக பட்டாசுகள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கான நீண்ட நேரம் எரியும் வகையிலான சாட்டை, கம்பி மத்தாப்புகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருப்பதால், மழை பெய்தால் தான் மானாவாரி விவசாயம் என்கிற நிலை. அதனால், இப்பகுதியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்கள் முதன்மைத் தொழிலாக இருந்து வருகிறது. அதிலும், இந்தியாவின் பட்டாசு தொழில் நகரம் மற்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும் நகரமாக சிவகாசி விளங்கி வருகிறது. இத்தொழிலில் மறைமுகமாக 2 லட்சம் பேரும், நேரிடையாக 3 லட்சம் பேரும் குடும்பம், குடும்பமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியைச் சுற்றியுள்ள சாத்தூர், விருதுநகர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் மட்டும் சிறியதும், பெரியதுமாக 865 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தீபாவளி திருநாளுக்கு இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில் ஆலைகளில் பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, ஆலைகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் விரும்பும் வகையில் வானில் சென்று பல்வேறு வண்ணங்களில் வெடித்துச் சிதறும் பட்டாசு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், இளைஞர்கள் விரும்பும் வகையில் சட்டி, பூந்தொட்டி, ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான சர வெடிகள், புதிய வகைகளான ஸ்பீடு 30 சாட், பல வண்ணங்களில் 5 நிமிடங்கள் வரையில் வானில் வெடித்துச் சிதறும் மெட்ரோ டிராவலர், பாரடைஸ் 100, 160 மற்றும் 500 சாட் என பேன்சி ரக பட்டாசுகளும், சிறியவர்கள் விரும்பும் வகையிலான தீப்பெட்டி மத்தாப்பு, நீண்ட நேரம் எரியும் வகையில் கம்பி மற்றும் பென்சில் மத்தாப்புகள் தயாரித்து வெளி மாநிலங்ளுக்கும், உள்ளூர் பகுதிகளில் உள்ள அனுமதி பெற்ற பட்டாசுகள் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதிக்கும் சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு, இப்பகுதியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளுடன் கலந்து விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால், ஆலைகளை நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் அதைச் சார்ந்துள்ள தொழிலாளர்களும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதனால், இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தெரிவி்க்கின்றனர்.
இது குறித்து மேட்டமலையைச் சேர்ந்த தனியார் பட்டாசு ஆலை பெண் தொழிலாளி பிரின்ஸி(34) கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யவும் தெரியாது. இந்த வேலையை குடும்பத்தோடு செய்து, அதில் கிடைக்கும் வருவாய் மூலமே எங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறோம். இங்கு தயார் செய்யப்படும் பட்டாசுகள் வெடிப்பதற்கு தரமானாது ஆகும். தற்போது, சிவகாசி பகுதியில் சீன பட்டாசுகளையும் கலந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பட்டாசு தொழிலாளர்களான எங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்படும் நிலையிருக்கிறது. அதனால், அரசு உரிய நடவடிக்கை எடுத்து சீனப் பட்டாசுகளை விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.