விருதுநகர் மாவட்டத்தில் தேவர் ஜயந்தி மற்றும் குருபூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பசும்பொன்னிற்கு 29-ம் தேதி முதலே செல்வார்கள். மேலும், விழாவில் பங்கேற்க வாடகை வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதாயாத்திரையாகவோ செல்ல அரசு தடை விதித்துள்ளது.
அதேபோல், சொந்த வாகனங்களில் செல்வதற்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வாகனத்தின் உரிமையாளர், அதற்கான ஆவணங்கள், வாகனத்தை இயக்குபவர் முறையாக பெற்ற ஓட்டுநர் உரிமம், அதில் செல்கிறவர்களின் விவரம் ஆகியவற்றை அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும். அதையடுத்து காவல் ஆய்வாளரால் ஆய்வு செய்து வழங்கப்படும் வாகன அனுமதி சீட்டை வாகனத்தில் முன்புறம் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்நிகழ்ச்சிக்கு செல்கிறவர்களின் வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வதற்காக விருதுநகர் மாவட்டத்தில் அழகாபுரி, கா.விலக்கு, ராமலிங்காபுரம், திருத்தங்கல், சாத்தூர், என்.ஜி.ஓ.காலனி, ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி, பந்தல்குடி மற்றும் ஆவியூர் ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் கணிப்பொறி வசதியுடன், வெப்கேமரா பொறுத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட இருக்கிறது.இச்சாவடிகளில் காவல் ஆய்வாளர் தலைமையில் உள்ள போலீஸார்கள் தனி வாகனமா, வாடகை வாகனமா என சந்தேகம் ஏற்பட்டால் உடனே வட்டார போக்குவரத்து துறை மூலம் ஆன்லைனில் பதிவு எண் மற்றும் உரிமையாளர் விவரங்கள் அனைத்தையும் உடனே சரிபாக்கப்படும். அதேபோல், விதிமுறை மீறும் வாகனங்களின் விவரங்களை உடனே கேமராவில் பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குருபூஜை நிகழ்ச்சிக்கு செல்கிறவர்கள் காவல் துறை குறிப்பிட்ட வழித்தடத்தில் சென்று திரும்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் வழித்தடம் மாறிச் சென்றால் அந்த வாகனம் காவல் துறையால் பறிமுதல் செய்து, பயணம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையி்ல் தலைவர் சிலைகளுக்கு பாதுகாப்பு ஆகிய பணியில் 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.