விருதுநகர் அருகே பொதுப்பாதையில் நடப்பதற்கு தடை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை அருந்ததியர் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிச்சநாயக்கன்பட்டி கிராமம்,. இங்குள்ள பொதுப்பாதையில் அருந்ததியின மக்கள் நடப்பதற்கு உரிமை பெற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதையடுத்து, கிராம மக்கள் சிலர் மட்டும் ஆட்சியரிடம் நேரில் மனு அளிப்பதற்கு அனுப்பி வைத்தனர்.
இக்கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறோம். இப்பகுதியில் இறந்தவர்களை பொதுப்பாதை வழியாக எடுத்துச் சென்று புதைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் இறந்தவரை அடக்கம் செய்வதற்காக பொதுப்பாதை வழியாக சென்றோம். அப்போது, அப்பகுதியில் மற்றொரு பிரிவினர் இந்த வழியாக கொண்டு வரக்கூடாது.
உங்களுக்கென்று பாதை உருவாக்கிக் கொண்டு அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என தடுத்தனர். இதை எதிர்த்தால் கலவரச் சூழல் ஏற்படும் நிலையிருப்பதால், இது தொடர்பாக காவல் துறை மற்றும் வட்டாட்சியரிடம் முறையிட்டோம். அவர்களும் பொதுப்பாதையில் நடப்பதற்கு உங்களை யாரும் தடுக்க முடியாது என்றும், மீண்டும் சம்பவம் நடந்தால் உடனே நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். பின்னர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் இறந்தவரை பொதுப்பாதை வழியாக கொண்டு சென்ற போது மற்றொரு பிரிவினர் பிரச்னை செய்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டதற்கு அரசிடம் தெரிவித்து தனிப்பாதை உருவாக்கித் தருகிறோம் எனக் கூறி மற்றொரு சமுதாயத்தினருக்கு சாதகமாக செயல்படுகிறார்கள்.
அதனால், நாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் பொதுப்பாதையில், எங்களுக்கு உரிய உரிமையை பெற்றுத் தர வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.