சுய உதவிக்குழு பெயரில் போலியான தகவல்களை அளித்து, ரூ.3 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட கிராமத்தினர் புகார் அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நூத்துலாபுரம் அடுத்துள்ள என்.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பி.சரஸ்வதி உள்பட 7 பேர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:
கடந்த 2008ஆம் ஆண்டு, வத்தலகுண்டு அடுத்துள்ள கட்டகாமன்பட்டியைச் சேர்ந்த சிலர், எங்கள் பகுதிக்கு வந்தனர். தொண்டு நிறுவனம் நடத்துவதாகவும், 12 பெண்கள் கொண்ட ஒரு குழுவாக இருந்தால் தொழில் தொடங்குவதற்கு நிதி உதவி செய்வதாகவும் தெரிவித்தனர். அதன்படி 12 பெண்களுக்கான குடும்ப அட்டையின் நகல்களையும் பெற்றுச் சென்றனர். அதன்பின்னர், எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் நிலக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. எங்கள் பகுதியைச் சேர்ந்த ராஜகொடி என்பவரை தலைவராகக் கொண்டு செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு, கடந்த 2009ஆம் ஆண்டு ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராஜகொடி என்பவர் ஆணாக இருக்கும் நிலையில், அவர் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு செயல்படுவதாக கூறியும், போலியான நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியும் கடன் பெற்றுள்ளனர். உரிய விசாரணை நடத்தாமல் வங்கி அதிகாரிகள் பணம் கொடுத்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.எனவே ஆள்மாறாட்டம் செய்து, மோசடியாக பணம் பெற்ற நபர்கள் மற்றும் தவறான தகவல்களை நம்பி பணம் வழங்கிய வங்கி அதிகாரிகள் மீதும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.