விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கூடாரத்தில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 2 பேர் சாவு

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக கூடாரம் அமைத்து பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உடல்
Updated on
2 min read

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக கூடாரம் அமைத்து பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் அருகே காரிசேரி பகுதியில் திருத்தங்கல்லைச் சேர்ந்த முத்துராமலிங்கம்-ராமர் சகோதரர்கள் பட்டாசு ஆலையை நடத்தி வருகின்றனர். இந்த ஆலையில் 12-க்கும் மேற்பட்ட அறைகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்படாமல் இருப்பதாக வந்த புகாரை அடுத்து வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் கடந்த மாதம் 6-ம் தேதி ஆய்வு செய்து தாற்காலிகமாக பட்டாசுகள் தயாரிக்க தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி அந்த ஆலையின் அருகே சட்டவிரோதமாக தொழிலாளர்கள் தங்கும் கூடாரத்தில் பாதி வேலை முடிந்த நிலையில் உள்ள பட்டாசுகளை முழுமைப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்  இக்கூடாரத்தில் உள்ள 3 அறைகளில் புதன்கிழமையும் வழக்கம் போல் திருத்தங்கல் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 12 பேர் பேன்சிரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, கடும் வெய்யில் அடித்த நிலையில் மணி மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் ஏற்பட்ட தீ மளமள அடுத்தடுத்த கூடாரத்தில் உள்ள அறைகளுக்கும் பரவியது. மேலும், அருகில் இருந்த பட்டாசு ஆலைகளில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உள்ளே புக முடியாத அளவிற்கு அறைகளில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதில், 7 தொழிலாளர்கள் மட்டும் சோளக்காட்டு பகுதியில் தப்பியோடிய நிலையில், 5 பேர் மட்டும் விபத்தில் சிக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் இருந்து விரைந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதன் பின் இடிபாடுகளில் சிக்கிய உடல் கருகி உயிரிழந்து கிடந்த  திருத்தங்கல் பெரியார் நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் அருள்ராஜ்(45), அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(29) ஆகியோரின் சடலங்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதேபகுதியைச் சேர்ந்த பால்ராஜின் மகன் ரமேஷ்(29), லில்லி என்பவரின் மகன் பிரபாகரன்(24), அதே பகுதியில் சத்யா நகரைச் சேர்ந்த பாக்கியராஜின் மகன் முரளி(25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்,  மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், கோட்டாட்சியர் உதயகுமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, விருதுநகர் வட்டாட்சியர் சிவஜோதி, தனி வட்டாட்சியர்(தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில்) ஜெயந்தி, தொழிற்சாலை பாதுகாப்பு துறை ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்டோர் வெடி விபத்து நடந்த ஆலைக்கு விரைந்து வந்து  பார்வையிட்டனர். மேலும்,இந்த விபத்து தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் பட்டாசு ஆலையை நடத்தி வரும் முத்துராமலிங்கம்-ராமர் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com