அம்பாசமுத்திரம் : பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை தாக்க முயற்சி; பெற்றோர் சாலை மறியல்

அம்பாசமுத்திரம் அருகே பொட்டல்புதூரில் பள்ளி மாணவிகளை கழிவறைக்குள் பதுங்கியிருந்து, கத்தியைக் காட்டி மிரட்டி சீண்டலில் ஈடுபட முயன்ற இளைஞர்களைக் கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
Updated on
1 min read

அம்பாசமுத்திரம் அருகே பொட்டல்புதூரில் பள்ளி மாணவிகளை கழிவறைக்குள் பதுங்கியிருந்து, கத்தியைக் காட்டி மிரட்டி சீண்டலில் ஈடுபட முயன்ற இளைஞர்களைக் கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

புதன்கிழமையன்று பள்ளி மாணவிகளை கேலி செய்ததாக, பொறியியல் மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூவரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்களே இன்று கழிவறையில் பதுங்கியிருந்து 6,7ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளை கத்தியைக் காட்டி மிரட்டியதாகத் தெரிகிறது.

முன்னதாக, பொட்டல்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் பெண்களிடம் இளைஞர்கள் சிலர் கேலி செய்து வந்தனராம். இது குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். மாணவிகளின் பெற்றோர்கள் புதன்கிழமை பள்ளியில் கூடி சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முற்றுகையில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் பெற்றோர்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனையடுத்து தொடர்புடைய இளைஞர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமலையப்பபுரம் பஜனை மடத்தெருவைச் சேர்ந்த கனி (எ) பக்கீர்மைதீன் மகன் முகமது ஜெய்லுதீன் ஆசாத் (19), அதே பகுதியைச் சேர்ந்த கணேசன், சுடலைமாரி, தங்கமாரி மற்றும் பொட்டல் புதூரைச் சேர்ந்த தலையாரி செல்லப்பா மகன் கிருஷ்ணசாமி (19) ஆகியோர் மாணவிகளை கிண்டல் செய்தது தெரிய வந்தது.

இவர்களில் முகமது ஜெய்லுதீன் ஆசாத், கிருஷ்ணசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். முகமது ஜெய்லுதீன் ஆசாத் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். மேலும் கடையம் காவல் ஆய்வாளர் முருகன் இது குறித்து விசாரணை செய்து வருகிறார். மற்ற மூவரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை நடந்த சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவியருக்கு பாதுகாப்பில்லாத நிலை இருப்பதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் அம்பை காவல்கண்காணிப்பாளர் மணிமாறன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com