ஈரோடு மாவட்டம், சென்னிமலை கந்தசாமிபாளையத்தில் வெள்ளியங்கிரி மகள் கோகிலா (23) என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணமான புதுப்பெண் அடுத்த நாளே செல்வம் என்பவருடன் மாயமானார். செல்வத்திற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் அவர் கவுன்சிலராக உள்ளார். மாயமான இருவரும் தூத்துக்குடி அருகே எப்போதும் வென்றான் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது போலீசில் மாட்டிக் கொண்டனர்.
அப்போது இருவரும் விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இருவரையும் மீட்ட போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் கோகிலாவுடன் சென்றது குறித்து தனதுமனைவி சுதாவிற்கு கவுன்சிலர் செல்வம் எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் செல்வம் கூறியிருப்பது:
"அன்புள்ள மனைவி சுதாவிற்கு, கோகிலா 2010ல் ஒரு பையன லவ் பண்ணினா. அவன் செத்துட்டான். அதனால் வேறு மாப்பிள்ளை எதுவும் வேண்டாம்னு சொல்லி இருந்தாள். ஆனாலும் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. நான் தான் அவளை வற்புறுத்தி திருமணத்துக்கு பணிய வைத்தேன். அதே சமயம் 6 மாசம் எந்த உறவும் வேண்டாம் என்று புதுக் கணவரிடம் வலியுறுத்தவும் கூறியிருந்தேன். அவளும் முதலிரவின் போது இதை தெரிவித்துள்ளாள். ஆனால் அவரோ தொடுவேன் என்று அடம் பிடித்துள்ளார். தொட்டால் செத்து விடுவேன் என்று சொல்லி முதலிரவுக்கு மறுத்து விட்டாள். ஆனால் புது கணவரோ, கண்டிப்பாக அடுத்த நாள் தொடுவேன் என்று கூறியுள்ளார்.
இதனால் நான் சாகப் போகிறேன் என்று கோகிலா என்னிடம் தெரிவித்தாள். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்னையாகி விடும். எனவே நான் அவள எங்காவது கூட்டிட்டு போயிட்டு வர்றேன். வர்றதுக்கு நாள் ஆகும். உன் மேல நான் வச்ச காதல் மாறாது. நீ எனக்காக வெயிட் பண்ணு. கிஷோர், கீர்த்திகாவை பார்த்துக்க, எல்லோரும் என்ன மன்னிச்சுடுங்க. கோகிலா மேல ரொம்ப பாசம் வச்சுட்டேன். நீ சொன்னப்ப நான் கேக்கல, உண்மையா லவ் பண்ணின உனக்கு துரோகம் பண்ணிட்டு நான் போறேன். கண்டிப்பா திரும்பி வருவேன்.... என்னை தப்பா நினைக்காத.
செத்துவிடலாம் போல இருக்கு. எவ்வளவு நாள் ஆனாலும் நான் வருவேன். கோகிலாவை சாக விடக்கூடாது என்பதுக்காகதான் இப்ப போறேன். அவளும் குடும்பத்துக்காகத்தான் திருமணத்துக்கு ஒத்துகிட்டா. சுதா நீ இருந்தா நா இருப்பேன். நீ இல்லேன்னா நானும் கண்டிப்பா செத்துருவேன்". என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் விஷ மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற கோகிலாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதே நேரம் செல்வத்தின் உடல்நிலை தேறிவருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து செல்வத்திடம் கடிதம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.