பட்டாசு ஆலைகளில் இடையூறு இல்லாமல் அதிகாரிகள் ஆய்வு செய்ய சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரி்ககை

பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆகியோருக்கு இடையூறு இல்லாமல் அதிகாரிகள் குழுக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சிறு பட்டாசு ஆலை
Updated on
1 min read

பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆகியோருக்கு இடையூறு இல்லாமல் அதிகாரிகள் குழுக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் விநாயகமூர்த்தி தமிழக முதல்வர், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: இம்மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த ஜூன்.16ம் தேதி முதல் செப்.16ம் தேதி வரையில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் தொடர் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், விதிமுறைகளை பின்பற்றப்படவில்லை எனக் கூறி 162 மாவட்ட உரிமம் பெற்ற சிறு பட்டாசு ஆலைகள் மற்றும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்ற 50 ஆலைகள் மீதும் உற்பத்திக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்தனர். அதிலிருந்து மிகவும் சிரமத்துடன் விடுபட்டு மீண்டும் விதிமுறைகளை சரி செய்து உற்பத்தியை தொடங்கியுள்ளனர்.

இன்னும் தீபாவளிக்கு சில வாரங்களே உள்ள நிலையில், வெளியூர்களில் இருந்து பெறப்பட்ட ஆர்டர்களுக்கு பட்டாசுகளை குறிப்பிட்ட நாள்களுக்குள் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிலாளர்கள் கூலி, பட்டாசுகள் தயார் செய்வதற்கான மூலப்பொருள்கள் விலை உயர்வு ஆகியவைகளால் சிரமத்தில் உள்ள நிலையிலும் உற்பத்தியை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உள்ளனர்.அதற்குள், இம்மாதம் 17-ம் தேதி முதல் மீண்டும் ஆலைகளை ஆய்வு செய்ய மாவட்ட அளவில் அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் செவ்வாய்கிழமை முதல் ஒவ்வொரு ஆலையாக ஆய்வு செய்து உரிமையாளர்கள் கைப்பேசி எண்கள் பெற்றுச் செல்கின்றனர். அதோடு, குறிப்பிட்ட இடங்களுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கையால் உரிமையாளர்கள் மீண்டும் கலக்கம் அடைந்துள்ளனர்.

மேலும், ஆலையில் தொழிலாளர்ளிடையே அச்ச உணர்வு ஏற்பட்டு உற்பத்தி பாதிப்பு ஏற்படும் நிலையிருக்கிறது. எனவே பாரம்பரியம் மிக்க பட்டாசு தொழிலை பாதுகாக்க நல்ல வழிமுறைகளை அரசு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழக முதல்வர், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com