சாத்தூர் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி சுப்பிரமணியாபுரம் கிராம பொதுமக்கள் வியாழக்கிழமை காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் இருந்து பிரிந்து செல்லும் சல்வார்பட்டி-எரவார்பட்டி சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இக்கிராமத்திலிருந்து அருகில் உள்ள கிராமங்களில் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல், அருகிலுள்ள பட்டாசு ஆலைகளுக்கும் தொழிலாளிகள் வேலைக்கு சென்று வருகின்றனர். எனவே இக்கிராமங்களுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைக்கும், பள்ளிக்கும் செல்ல முடியாத நிலையிருக்கிறது. ஒரு சிலநேரங்களில் பேருந்தும் இடையிலேயே பழுதாகி நின்று விடுகிறது.
அதனால், இக்கிராமங்களுக்குச் இடையே செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறையினருக்கு கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரையில் சாலையை சீரமைக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீஸார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சாலை அமைக்கப்படும் என உறுதி கூறியதை அடுத்து பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தினால் அரசு பேருந்து மற்றும் பட்டாசு ஆலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து அரைமணிநேரம் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.