விருதுநகர் அருகே ரயில் குறைந்த வேகத்தில் செல்வதாக கூறி பயணிகள் மறியல்
விருதுநகர், செப்.23: விருதுநகர்-மானாமதுரை ரயில் குறைந்த வேகத்தில் செல்வதாக கூறியும், அடுத்த ரயிலை குறிப்பிட்ட நேரத்தில் பிடிக்க முடியாத காரணத்தாலும் ஆத்திரம் அடைந்த பயணிகள் செவ்வாய்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து மானாமதுரைக்கு செல்லும் ரயில் காலை 6 மணிக்கு அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வழியாக மானாமதுரைக்குச் 7.45 மணிக்கு சென்றடையும். இன்றும் வழக்கம் போல் 6 மணிக்கு ரயில் புறப்பட்டு குறைந்த வேகத்தில் சென்ற நிலையில் நரிக்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர். இதற்கிடையே மானாமதுரையில் இருந்து விருதுநகருக்கு வரும் சரக்கு ரயில் வந்துள்ளது. அந்த ரயில் செல்வதற்காக நிறுத்தியிருப்பதாக பயணிகளிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பயணிகள் ரயில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றால் தான் பல்வேறு பணிகளுக்கு செல்கிறவர்கள், மானாமதுரையில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் ராமேஸ்வரம் பயணிகள் ரயிலை பிடிக்க முடியும். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் அந்த வழியாக வந்த சரக்கு ரயிலை திடீரென மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரயில்வே துறை அதிகாரிகள் சமரசம் செய்ததை தொடர்ந்து நரிக்குடி நிலையத்திலிருந்து பயணிகள் ரயில் 7.50 மணிக்கு மானாமதுரைக்கு புறப்பட்டு சென்றது. இந்த மறியல் போராட்டத்தினால் சரக்கு ரயில் 15 நிமிடம் தாமதமாக நரிக்குடி ரயில் நிலையத்திலிருந்து விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றது.