திருநாங்கூரில் 11 கருட சேவை: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் திருநாங்கூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கருடசேவை உற்ஸவத்தில் திருநாங்கூர் திவ்யதேச 11 பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். லட்சக்கணக்க
Published on
Updated on
3 min read

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் திருநாங்கூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கருடசேவை உற்ஸவத்தில் திருநாங்கூர் திவ்யதேச 11 பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வீதியெங்கும் நின்று கோவிந்தா, கோவிந்தா என முழக்கம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.

வைணவ தலங்கள் 108இல், சீர்காழி வட்டம்  திருநாங்கூரைச் சுற்றி திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற 11 பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆண்டு தோறும் திருநாங்கூர் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் சந்நிதியில்  தை  அமாவாசைக்கு மறுநாள் 11 பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் உற்ஸவம் நடைபெறும். அதை ஒட்டி, இந்த வருடம் இந்த உற்ஸவம் ஜன.31ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

வெள்ளிக் கிழமை பிற்பகல் திருநாங்கூர் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள், செம்பொன்செய்கோவில் செம்பொன்னரங்கர், திருவெள்ளக்குளம் அண்ணன்பெருமாள், திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாள், திருத்தேவனார்தொகை மாதவப் பெருமாள், திருக்காவளம்பாடி கோபாலன், அரிமேய விண்ணகரம் குடமாடும்கூத்தர், திருத்தோற்றியம்பலம் பள்ளிகொண்டபெருமாள், வண்புருஷோத்தம் புருஷோத்தமப் பெருமாள், வைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதன், திருப்பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி ஆகிய 11 பெருமாள்களை பக்தர்கள் பல்லக்கில் சுமந்து வந்தனர்.

பின்னர் மணிமாடக் கோயில் வாசலில் 11 பெருமாள்களையும் மணவாளமாமுனிகள் சகிதம் திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்களை பட்டாசாரியார்கள் ஒருசேர  பாடி வரவேற்றனர். அனைத்து பெருமாள்களும் 11 மாடங்களில் வைக்கப் பட்டு  மலர்கள், திருவாபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெள்ளி இரவு 12 மணிக்குமேல் 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள் சகிதம் ஹம்ச வாகனத்தில்  எழுந்தருளி சேவை சாதித்தனர். அப்போது சிறப்பு தீபாராதனை காண்பித்து கருட சேவை நடைபெற்றது.

தொடர்ந்து பெருமாள்கள் வீதியுலா காட்சி நடந்தது. வீதியெங்கும் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பினர். உற்ஸத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபி சக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சி தலைவர் ஏ.கே.சந்திரசேகரன், ஒன்றிய பெருந்தலைவர் வே.பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பெருமாள் தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி டி.எஸ்.பி வெங்கடேசன் செய்திருந்தார்.

பதினோரு கருட ஸேவை : படங்கள் ... (படத்தில் க்ளிக் செய்து பெரிதாகக் காணலாம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com