புதுகை அருகே நரிக்குறவர் காலனியில் மதமாற்றம்: பொது மக்கள் புகார்
By மோகன்ராம் | Published On : 19th January 2014 05:35 PM | Last Updated : 19th January 2014 05:35 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள் சத்திரம் நறிக்குறவர் காலனியில் வசித்துவரும் அந்த இன மக்களை மதமாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் நரிக்குறவர் இன மக்கள்சுமார் 300 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி உள்ளிட்ட பல்வேறு இந்துக் கடவுள்ளை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அந்த பகுதியை சேர்ந்த மல்லி மற்றும் வேதையன் ஆகியோர் வேறு மதத்திற்கு மாறிவிட்டதாகவும், இவர் இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு சிலருடன் சேர்ந்து கொண்டு நறிக்குறவர் காலனியில் வசித்து வரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், சிறுவர்களை வழிபாட்டிற்கு பெரியவர்களுக்கு தெரியாமல் அழைத்து கொண்டு சென்று விடுவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் மதம் மாற மாட்டோம் என்று கூறினாலும் அவர்கள் மதமாற கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் நரிக்குறவர்கள் அண்மையில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிலர் இந்தக் காலனிக்கு வந்து வேறு மதத்தைச் சேர்ந்த வழிகாட்டிநெறிகள் அடங்கிய 10 கட்டளைகள் அடங்கிய அட்டைகளை ஒவ்வொரு வீட்டின் வாசலில் வைத்து விட்டு சென்றனராம்.
இதைத்தொடர்ந்து நரிக்குறவர் காலனி சங்க தலைவர் வேலன் தலைமையில் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி காலனியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் புதுக்கோட்டையில் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி நடைபெற்று வருவது குறித்து கண்டனம் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு இப்பிரச்சினையை தொடக்க நிலையிலேயே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.