விருதுநகர் அருகே வாகனத்தில் அனுமதியின்றி கடத்தப்பட்ட கருந்திரி கட்டுக்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அருகே இனாம்ரெட்டிபட்டி வழியாக தாயில்பட்டி பகுதிக்கு வாகனங்களில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சாலைப்பகுதியில் காலையில் காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் போலீஸார்களை பார்த்ததும் உடனே திரும்பி செல்ல முயற்சி செய்தனர். உடனே விரைந்து சென்று போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து வாகனத்தை சோதனையிட்டனர். அதில், சாக்குபைகளில் 1250 கருந்திரி கட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை செய்ததில் தாயில்பட்டியைச் சேர்நத வீரபாண்டியன் மகன் சோலைச்சாமி(26), விஜயரெங்காபுரத்தை சேர்ந்த அப்பாத்துரையின் மகன் சுரேந்தர்(25), அதே பகுதியைச் சேர்ந்த தன்ராஜ்மணியின் மகன் திருவைதாஸ்(30) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் குல்லூர்சந்தையில் இருந்து தாயில்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதும் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். அதோடு, கருந்திரி கட்டுக்களை கடத்த பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.