விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு எட்டு நோய்களுக்கான தடுப்பூசி போடும் முகாம் வருகிற 7-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 15-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் டாக்டர்.கதிரேசன் சனிக்கிழமை கூறியதாவது:
மத்திய சுகாதார துறையின் சார்பில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசி போடும் திட்டம் இந்தியா முழுவதும் 680 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ஜன்னி, இளம்பிள்ளைவாதம், தட்டம்மை, மஞ்சள் காமலை, மூளைக்காய்ச்சல் மற்றும் காசநோய் ஆகியவைகளை தடுப்பதற்காக போடப்படும் தடுப்பூசி ஆகும்.விருதுநகர் மாவட்டத்திலும் மேற்குறிப்பிட்ட நாள்களில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற இருக்கிறது. இதுவரையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் விடுப்பட்டுப்போன குழந்தைகள் ஆகியோர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி போட்டதும், அரை மணிநேரம் குழந்தைகளை தாய்மார்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி அந்த இடத்திலேயே வைத்திருக்க வேண்டும். மேலும், வலியோ வீக்கமோ ஏற்பட்டால் பாரசிட்டமல் மாத்திரையை பயன்படுத்த வேண்டும். அதேபோல், தடுப்பூசி போடாத கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
இம்முகாம், அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. அதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு, மேற்குறிப்பிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.