சுற்றுலா பயணிகளை கவரும் கிருஷ்ணகிரி அணை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா மையமான கிருஷ்ணகிரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணைக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.  
Updated on
3 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா மையமான கிருஷ்ணகிரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணைக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.  

கிருஷ்ணகிரி மாவட்டமானது ஆந்திரம், கர்நாடக மாநில எல்லையாக கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தேசியநெடுஞ்சாலை, சென்னை - பெங்களூர், பாண்டிச்சேரி - பெங்களூர் என 5 தேசிய நெடுஞ்சாலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைக் கடந்து செல்லுகின்றன.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல ஆண்டு கால பழமைவாய்ந்த ஓவியங்களையும் கற்சிலைகளையும் வரலாற்றையும் கொண்டுள்ளது.

பழங்காலத்தில் எயில் நாடு என அழைக்கப்பட்ட கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் தருமபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி அணை.  கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இரண்டு மலைகளின் அருகே பெரியமுத்தூர் என்ற கிராமத்தில் அணை கட்டும் பணி 1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1957-ஆம் ஆண்டில் ரூ.2 கோடி மதிப்பில் நிறைவு பெற்றது.

விவசாயிகளின் நலன் கருதி கட்டப்பட்ட இந்த அணையை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகின்றனர். இருந்தபோதிலும், இந்த அணைப் பகுதியில் வலது புறம் 45 ஏக்கர் பரப்பளவிலும், இடது புறம் 15 ஏக்கர் பரப்பளவு என மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் பசுமையான பூங்காவை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

சிறுவர் விளையாடு மகிழும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், பரந்து விரிந்த பசுமையான புல்தரைகள், நீரூற்றுகள் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த சுற்றுலா மையத்தை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அனைத்து கட்டு அமைப்புகள் உள்ளதால் இந்த சுற்றுலா மையமான கிருஷ்ணகிரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு   பள்ளி விடுமுறை நாள்கள், கோடை விடுமுறை, விநாயகர் சதுர்த்தி, ஆடி 18, தெலுங்கு வருட பிறப்பு, ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, கிருஸ்துமஸ், முகரம் போன்ற விழாக் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

இந்த சுற்றுலா மையத்துக்கு  குடும்பத்துடன் வருகை தரும் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் மகிழ்ந்து விளையாடுவது கண்கொள்ளா காட்சியாகும்.  இத்தகைய சம்பவங்கள் விளையாடுபவர்களின் குடும்ப உறவை வளப்படுத்துவதன் மூலமும் காண்போரை பரவசப் படுத்துகின்றன.  மேலும், சுற்றுலா பயணிகள் வட்டமாக அமர்ந்து  உணவை சுவைப்பது மனதுக்கு ஆனந்தத்தை தரும். இத்தகைய சூழல் சுற்றுலா பயணிகளை மட்டுமல்ல காண்போரையும் ஊக்கமும், உற்சாகமும் அடைய செய்யும்.

மேலும்,   இங்குள்ள மான் பூங்கா சுற்றுலா பயணிகளை கவர்கிறது.  இயற்கையோடு ஒன்றி மரம் விட்டு மரம் தாவி சேட்டைகள் செய்யும் குரங்குகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் மகிழ்விக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சமாக இருந்தது தற்போது 5 லட்சமாக உயர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் மூலம் ரூ.15 லட்சமாக இருந்த வருவாய் கடந்த ஆண்டு ரூ.20 லட்சமாக உயர்ந்துள்ளது.

பொதுப்பணித் துறைக்கு வருவாய் உயர்ந்துள்ள நிலையில் சுற்றுலாத் துறையின் பராமரிப்பின் கீழ் கொண்டுவருவதன் மூலம் கிருஷ்ணகிரி அணை பூங்காவை மேம்படுத்த முடியும். மேலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேலும் சிறுவர் பூங்கா, நவீன  விளையாட்டு சாதனங்கள், வண்ண நீரூற்றுகள்,  அணையின் பகுதியில் மோட்டார் படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்துவதன் மூலம் இந்த அணையை தமிழகத்தில் சிறந்த சுற்றுலா மையமாக மேம்படுத்த முடியும்.

கிருஷ்ணகிரி அணைக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் பெங்களூர், கோலார் தங்க வயல், ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

மேலும், அணை கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அப்போதை முதல்வர் காமராஜர் மற்றும் அமைச்சர்கள் பலர் அணை பயணியர் மாளிகையில் தங்கி பணிகளை துரிதப்படுத்தினர். இவ்வாறு கிருஷ்ணகிரிக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் பயணியர் மாளிகையில் தங்கும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள நோட்டு புத்தகத்தில் தங்களது கருத்தை பதிவு செய்து கையொப்பம் இட்டுள்ளனர்.

கடந்த 1955ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி இங்கு வந்து தங்கிய அப்போதைய வேளாண்மை மற்றும் தொழில் துறை அமைச்சர் பக்தவச்சலம் பணிகள் துரித கதியில் நடந்து வருவதாக எழுதி கையொப்பம் இட்டுள்ளார்.

இதனையடுத்து 1956-ம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி இங்கு வந்து தங்கிய சென்னை ராஜ்ஜியத்தின் முதல்வர் காமராஜர் அணை கட்டும் திட்டம் நல்ல முறையிலும் விரைவாகவும் நடந்து கொண்டு வருவதை கண்டு களிப்படைந்தேன் என்று எழுதி கையொப்பம் இட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து 1957 மே 26-ஆம் தேதி இங்கு வந்து தங்கிய மராமத்து துறை அமைச்சர் கக்கனும் தனது கருத்தை பதிவு செய்து கையெழுத்திட்டுள்ளார். அணை பயன்பாட்டுக்கு வந்த பின் 1972 ஜூன் 18ம் தேதி பயணியர் மாளிகையில் தங்கிய கருணாநிதி நீர்த்தேக்கம் பயனுள்ள ஒன்றுமட்டுல்ல நேர்த்திமிக்க ஒரு அமைப்புமாகும். தொடர்ந்து கடமையாற்றும் அலுவலர்களின் ஆர்வத்தால் வலிவும் பொலிவும் கொண்டு இந்த நீர்தேக்கமும் சார்புடைய பகுதிகளும் விளங்கிட வேண்டுமென விளைகிறேன் என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

இதேபோல் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும் அணை கட்டுமான பணியை பார்வையிட்டு தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதிவுகளை மக்களின் பார்வைக்கு காட்சியாக வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.   மேலும், சுற்றுலாவை மேம்படுத்த அவதானப்பட்டி அருகே உள்ள மலைப் பகுதியிலிருந்து அணைக்கு ரோப் கார் வசதியை ஏற்படுத்துவதன் மூலம் அதிக சுற்றுலா பயணிகளை கவர முடியும் என்கின்றனர் சுற்றுலா ஆர்வலர்கள்.  கிருஷ்ணகிரி அணை சுற்றுலா மையமானது இயற்கையோடு ஒன்றி சுற்றுச் சூழல் மாற்ற நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த செலவு ஏற்படுவதாலும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.  இதனால் சுற்றுலாப் பணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com