காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் நீர்த்துப்போகும் நிலையில் பள்ளி மாணவியை தாக்கிய வழக்கு

காரைக்காலில் ஆண்டு விழாவுக்கு பணம் தராத மாணவிகளை ஆசிரியர் கடுமையாக தாக்கிய வழக்கு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கல்வித்துறையின் அலட்சியத்தால் நீர்த்துப்போகும்
Updated on
1 min read

காரைக்காலில் ஆண்டு விழாவுக்கு பணம் தராத மாணவிகளை ஆசிரியர் கடுமையாக தாக்கிய வழக்கு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கல்வித்துறையின் அலட்சியத்தால் நீர்த்துப்போகும் நிலையில் உள்ளது. இது பெற்றோர், மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

காரைக்கால் மேலகாசாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில்  6-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் காவ்யலட்சுமி, தர்ஷினி ஆகியோரை, பள்ளி ஆண்டு விழாவுக்கென நிர்ணயிக்கப்பட்ட தலா ரூ.1,200 செலுத்தவில்லையெனக் கூறி பள்ளி ஆசிரியை அமுதவல்லி என்பவர் கடுமையாக தாக்கினார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் மாணவர்கள் பிரம்புக் கம்பால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெற்றோர் இதுகுறித்து நெடுங்காடு காவல் நிலையத்தில் ஆசிரியை மீது புகார் தெரிவித்தனர். போலீஸாரும் வழக்குப் பதிவு செய்தனர்.

கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களை சாதனங்கள் கொண்டோ, கடுமையாகவோ, உடலுறுப்புகள் சேதமடையும் வகையிலோ பள்ளி ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்ற சரத்துகள் உள்ளன. ஆனால் தனியார் பள்ளி நிர்வாகம், மாணவர் சரியான முறையில் படிக்கவில்லையென ஆசிரியர் தாக்கினால்கூட சில பெற்றோர் ஏற்றுக்கொள்வர். சொந்த நிதியைக் கொண்டு ஆண்டு விழா நடத்தவேண்டிய சூழலில், மாணவர்களிடம் பெரு நகரங்களுக்கு இணையாக கட்டணத்தை நிர்ணயித்து வசூலித்து நடத்துவதென்பது ஏற்புடையது கிடையாது. இருந்தபோதிலும், கட்டணத்தை தராமல் காலம் தாழ்த்தியதற்காக, பிரம்பால் சிறார்களை அடித்து, காயப்படுத்தியது குற்றச் செயலாகும்.

இந்த சம்பவம் நடந்து 4 நாள்கள் கடந்தும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறை, கண்துடைப்பாக வழக்குப் பதிவு செய்துவிட்டு, எந்தவொரு விசாரணையும் நடத்தாமல் இருக்கிறது. முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளி நிர்வாகத்திடம் முறையாக விசாரணை நடத்தி, உரிய விதிகள்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிவேல் விடுப்பில் உள்ளார். அவர் இல்லாமல் எந்த நடவடிக்கையும் இதுகுறித்து எடுக்க முடியாது என்கிறது கல்வித்துறை அலுவலகம்.

மாவட்ட ஆட்சியர், கல்வித்துறையின் முக்கிய அதிகாரிகளை அழைத்துப் பேசி இப்பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கவேண்டும். தனியார் பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் வசூலித்த தலா ரூ.1,200 தொகையை, மாணவர்களிடமே திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டிருக்கவேண்டும். மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு கடுமையான சுற்றறிக்கை அனுப்பியிருக்கவேண்டும். ஆனால் எதுவுமே இதுவரை நடத்தவில்லை. ஆட்சியரும் தான் வெளியூரில் இருப்பதாக தொடர்புகொள்ளும்போது கூறுகிறார்.

எல்லாவற்றுக்கம் மேலாக பெற்றோர் சங்கம் என்ற பெயரில் இயங்கக்கூடிய அமைப்பினர், இப்பிரச்னை தமது செவிக்கு வரவில்லையென கூறும் வகையிலேயே, கண்டும் காணாததுபோல் இருக்கின்றனர். இதுபோன்று அதிகமான கட்டணத்தை வசூலித்துக்கொண்டும், சிறார்களை தண்டிக்கும் செயலுக்கு, உரிய தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் தடுக்கப்படும். காரைக்கால் நிர்வாகத்தின் இந்த போக்கு, ஒட்டுமொத்த பெற்றோர், குழந்தைகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com