காரைக்கால் ஓஎன்ஜிசி நிர்வாகமே பள்ளியை நடத்தவேண்டும்: மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்

காரைக்காலில் இயங்கும் ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியை தனியார் அறக்கட்டளை ஒத்துழைப்புடன் நடத்தாமல், ஓஎன்ஜிசி நிர்வாகத்தின் சார்பிலேயே நடத்தவேண்டுமென புதுச்சேரி பிரதேச
Updated on
1 min read

காரைக்காலில் இயங்கும் ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியை தனியார் அறக்கட்டளை ஒத்துழைப்புடன் நடத்தாமல், ஓஎன்ஜிசி நிர்வாகத்தின் சார்பிலேயே நடத்தவேண்டுமென புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

காரைக்காலில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது :  காரைக்காலில் இயங்கும் ஓஎன்ஜிசி காவிரி அசெட் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியை நடத்திவருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் மாணவ மாணவிகள் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படிக்கின்றனர்.

பொதுப் பள்ளி நடத்துவதற்கென தனியாக ஓஎன்ஜிசியிடம் சொசைட்டி உள்ளது. சொசைட்டி மூலம் ஓஎன்ஜிசி நிர்வாகமே பள்ளியை பொதுமேலாளர் தகுதியில் ஓஎன்ஜிசி அதிகாரியை நிர்வாகியாக நியமித்து நடத்தலாம். இதற்கான விதி உள்ளதாக ஓஎன்ஜிசி தெரிவிக்கிறது. ஆனால் என்ன காரணத்தினாலோ பல்வேறு கல்வி அறக்கட்டளையிடம் பள்ளியை நடத்த அனுமதித்துவருகிறது ஓஎன்ஜிசி நிர்வாகம். பள்ளியை ஏற்கும் அறக்கட்டளை தங்கள் சார்ந்திருக்கும் மத பழக்கவழக்கங்களை பள்ளி மாணவர்களிடம் திணிக்கும் வகையில் நடந்துவருவதாக புகார் எழுகிறது. இது கடந்த காலங்களில் பள்ளியை நிர்வகித்த அறக்கட்டளையிடமிருந்து அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கிறது.

மேலும் ஓஎன்ஜிசி விதித்த கட்டணத்தைவிட அறக்கட்டளை நிர்வாகம் கூடுதலாக மாணவர்களிடம் வசூலிக்கிறது. இதனால் ஓஎன்ஜிசிக்கென உள்ள பெருமை குலைந்துபோகிறது. இதுகுறித்து ஓஎன்ஜிசி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். நிகழ் கல்வியாண்டு முதல் எந்தவொரு அறக்கட்டளை மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்திடம் பள்ளியை நடத்துமாறு ஒப்பந்தம் செய்துகொள்ளக்கூடாது. ஓஎன்ஜிசியே நடத்தவேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது.

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசு கடந்த 4 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்துள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய யூனியன் பிரதேச அரசுக்கு அதிகாரம் இல்லையென குடியரசுத் தலைவருக்கு பேரவை  எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் புகார் அளித்தார். இதன் பின்னரே இப்போது முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். கடந்த 4 ஆண்டு இடைக்கால பட்ஜெட் வெறும் அறிவிப்பாகவே தொடரும்போது, இப்போதைய முழுமையான பட்ஜெட்டை மக்கள் நம்ப தயாராக இல்லை. இதுவே ரங்கசாமி அரசின் தோல்வியாகும் என்றார் ஏ.வி.சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com