தமிழ்நாடு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்டு, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ம.மாடசாமி கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பள்ளி கல்லூரிகளில் கிண்டல், கேலி செய்வது, தமிழக ரேக்கிங் ஆக்ட் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் வழிவகை செய்துள்ளது.
இக் குற்றம் செய்து தண்டனை பெற்றால் மாணவ மாணவியரின் எதிர்காலமே வீணாகிவிடும். இதில் கல்லூரி நிர்வாகத்தின் பொறுப்பும் உள்ளது. மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு, தங்களது பெற்றோர் எவ்வளவு தியாகங்களைச் செய்து உங்களைப் படிக்க வைக்கிறார்கள் என்பதை மட்டும் நினைத்து அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் படிப்பில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி, உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மேலும் வீட்டிலிருந்து வெளிப் பேருந்துகள் மற்றும் கல்லூரிப் பேருந்துகளில் கல்லூரிகளுக்கு வந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் குறித்தும் அவர் விளக்கினார்.நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.