ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலலிங்கம் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2015, 1:31 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலலிங்கம் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். துணை வேந்தர் ச.சரவணசங்கர் முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது: மலையாளம் பேசும் மக்களின் தவிர்க்க முடியாத பண்டிகை திருவோணம். ஆனால் சங்க காலத்தில் தமிழர்களால் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது என்பதே மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளும், வாமனன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில், பாண்டிய மக்கள் திருவோணத்தை பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…" என நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் கூறியுள்ளார். இன்று அத்திருவிழா தென்தமிழகத்திலும், கோவில்களோடும் நின்றுவிட்டது. ஆனால் கேரளத்தில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஓணம் பத்து நாட்கள் கொண்டாடப்படும்போது,  கேரளாவே பூக்களால் போர்த்தியதுபோல் காட்சியளிக்கும். கேரள நாட்டை முன்காலத்தில் மகாபலி என்னும் மன்னன் ஆட்சி செய்துள்ளார். இவரது ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மகாபலியை சோதிக்கும் வகையில், மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் பூமிக்கு வந்து, மகாபலியிடம் தனக்கு 3 அடி நிலம் வேண்டுமென்று கேட்டார்.

அதற்கு மகாபலி சம்மதம் தெரிவிக்க, வாமன அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, விஸ்வரூபமாக எழுந்து உலகை இரண்டு் அடி அளந்தார்.மூன்றாவது அடியையும் விஷ்ணு கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகாபலி, தனது வாக்கின் படி மூன்றாவது அடிக்கு  தனது தலையைக் கொடுத்துள்ளார். அப்போது, " உனது தலையை அளந்தால்.. நீ இறந்துவிடுவாயே!" என்ற மகாவிஷ்ணு, "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று மகாபலியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு மகாபலி, "ஒவ்வொரு ஆண்டும் திருவோண நாளில், நான் இந்த நாட்டு மக்களைச் சந்திக்க வருவதற்கு  வரம் வேண்டும்!" என்று கேட்டுள்ளார். அதன்படி மகாவிஷ்ணு,  மகாபலிக்கு வரம் கொடுத்துவிட்டு, மகாபலி தலையை மூன்றாவதாக அளந்ததாகவும், பின்னர், பெற்ற வரத்தின்படி மகாபலி ஒவ்வொரு ஆண்டும் திருவோண நாளில் மக்களைச் சந்திக்க வருவதாகவும் சொல்லப்படுகிறது.

திருவோண நாளில் நாட்டு மக்களைக் காணவரும் மகாபலி மன்னரை வரவேற்க வீடுகளின் முன் அத்தப்பூ என்று அழைக்கப்படும், விதவிதமான பூக்களிலாலான பூக்கோலம் இடுகின்றனர்.

வீடுகள், பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், ஆகியவற்றில் பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடுகின்றனர். மகாபலி மன்னன் தங்களை காண வருவதாக நம்பிக்கைக் கொண்ட மக்கள், மன்னனை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பது மக்களின் வழக்கம்.

சாதி, மத, பாகுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படுவதால் இந்த பத்து நாளும் திருவோணம் திருவிழாவாக நடக்கும். ஆண்கள் வேட்டி சட்டையிலும், பெண்கள் நேரியல் என்கிற புடவையிலும் அப்போது வலம் வருவார்கள் என்றார் அவர். விழாவில் மாணவ மாணவியரின் வண்ணமிகு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான மாணவ மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பதிவாளர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.