தலித் ஒருவரை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கோரிக்கை

விருதுநகரில் தனியார் மருத்துவரின் தூண்டுதலின் பேரில் தலித் ஒருவரை தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறையினரின்
Published on

விருதுநகரில் தனியார் மருத்துவரின் தூண்டுதலின் பேரில் தலித் ஒருவரை தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறையினரின் இச்செயலுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விருதுநகரில் டாக்டர் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்த அழகர்சாமியின் மகன் மாரிமுத்து(42). இவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவரது உடன் பிறந்த சகோதரருக்கும், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ரத்தினவேல் என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்தாராம். ஏற்கனவே அந்த மருத்துவர் மீது வன்கொடுமை வழக்கும் நிலுவையில் உள்ளதாம்.

இந்நிலையில் அவரது தூண்டுதலின் பேரில் கடந்த 27-ம் தேதி காலையில் மாரிமுத்துவை கிழக்கு காவல் நிலைய போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்களாம். அங்கு வைத்து ஒருநாள் முழுவதும் கடுமையாக காவல் துறையினர் தாக்கி, சித்ரவதையும் செய்துள்ளனர். இத்தாக்குதலில் இடது காது கேட்கும் திறனை இழந்துள்ளது. மேலும், மறைமுக உறுப்பில் வீக்கமும் ஏற்பட்டுள்ளது. உடலில் பல இடங்களில் லத்தியால் தாக்கிய காயங்களும் உள்ளன.

கணவரை தேடி காவல் நிலையத்தற்கு செல்வி சென்ற போது மிரட்டியும் அனுப்பியுள்ளனர். மாரிமுத்து மயங்கிய நிலையிலேயே விருதுநகர் அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் சென்றுள்ளனர். காவல் துறையினரின் இச்செயல்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது. அதனால், மாவட்ட நிர்வாகம் மாரிமுத்துவை தாக்கிய காவல் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தாக்குதலுக்கு காரணமான தனியார் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மறுக்கும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com