விருதுநகர் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க தகுதியான விவசாயிகளிடம் இருந்து வேளாண்மை துறை மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
இம்மாவட்டத்தில் நிகழாண்டில் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வேளாண்மை பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 398 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க வேளாண்மை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
இதில், விவசாயிகள் 100 சதவீத சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம் ஆகும். சிறு, குறு விவசாயிகளாகவும், அதற்கான சான்று வட்டாட்சியரிடமும் பெறப்பட்டிருக்க வேண்டும். கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு ஆகியவைகளுடன் மின் இணைப்பு அவசியம் ஆகும். பெண்கள், ஆதிதிராவிடர், ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குத்தகை விவாயிகளாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கான குத்தகை பத்திரம் நகல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவாசயிகள் ஒன்றாக இணைந்து சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
இதற்கு விவசாயிகள் தங்களது நிலத்தின் கணினி சிட்டா, குடும்ப அட்டை நகல், புகைப்படம் 2, கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற அடங்கல், நிலத்தின் வரைபடம், மண்பரிசோதனை மற்றும் நீர்ப்பரிசோதனை ஆவணங்களுடன் உரிய சொட்டுநீர் பாசன விண்ணப்பத்தினை வருகிற 18-ம் தேதிக்குள் அந்தந்த பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க முன்னுரிமை பதிவு செய்து பயனடையும்மாறு விவசாயிகளை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.