விருதுநகர் அருகே முந்திரிகொட்டை எண்ணைய் ஆலை உரிமையாளரின் இருசக்கர வாகனத்தின் மேல் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தையும், ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி ரூ.6500 ரொக்கத்தையும் எடுத்து கைவரிசை காட்டிய மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(42). இவர் இப்பகுதியில் முந்திரிக்கொட்டையிலிருந்து எண்ணைய் எடுக்கும் ஆலையை நடத்தி வருகின்றார். இவரது ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வாரச்சம்பளம் வழங்குவதற்காக சனிக்கிழமை விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.1 லட்சம் பணம் எடுத்தாராம். அப்பணம் மற்றும் கவரில் ரகசிய எண் எழுதப்பட்ட ஏ.டி.எம் கார்டு அடங்கிய மஞ்சள்பையை இருசக்கர வாகனத்தின் மேல்பையில் வைத்துள்ளார். அதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு தெப்பக்குளம் பகுதிக்கு வந்து வாகனத்தை ஓரப்பகுதியில் நிறுத்திவிட்டு தேநீர் குடிப்பதற்காக ஒதுங்கினாராம்.
அந்த இடைவெளியை அடையாளம் தெரியாத மர்ம நபர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருசக்கர வாகனத்தின் மேல்பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை ஏ.டி.எம் கார்டுடன் திருடிச் சென்றனர். இதைக் கவனிக்காமல் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்த பாண்டியின், கைப்பேசி எண்ணிற்கு திருமங்கலம் தனியார் ஏ.டி.எம் மையத்திலிருந்து ரூ.6500 எடுத்ததாக குறுஞ்தகவல் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாண்டி வாகனத்தில் பணப்பையை பார்க்கையில் ஏ.டி.எம் கார்டுடன் திருடு போயிந்ததும், அந்த கார்டை பயன்படுத்தி மர்ம நபர் பணம் எடுத்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக பாஜார் காவல் நிலையத்தில் பாண்டி புகார் செய்தார். அதன் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரொக்கம் மற்றும் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணமும் எடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து வங்கி நிர்வாகத்திடம் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.