திமுகவுடன் எங்கள் கூட்டணி தொடரும்: காதர்மொய்தீன்

வரும் 2016தேர்தலில் திமுகவுடன் எங்கள் கூட்டணி தொடரும் என  இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் காதர்மொய்தீன் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் காதர்மொய்தீன் நிருபர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை  கும்பகோணத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தில்லியில் நடந்த தேர்தலில் எதிர்பாராத அளவிற்கு ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின்  கொள்கை என்ன என்றே தெரியாது. திடீரென அக்கட்சி உருவாகி அதற்கு மக்களும் வாக்குகளை அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் வாக்குகளும், பிறகட்சியின் வாக்குகளும் அக்கட்சிக்கு கிடைத்திருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான 9மாத ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்க கோரி டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது கோரப்பட்டது. ஆனால் மோடியின் ஆட்சியின் கொள்கைக்கு  டெல்லி மக்கள் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை இத்தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளது. மத்திய அரசின் நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ்.,வி.எச்.பி. கொள்கை உள்ளே புகுந்துள்ளது. மதமாற்றம் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை மதமாற்றம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மதசார்பின்மையை மையமாக கொண்டு சட்டம் உள்ள ஜனநாயக நாட்டில் சமீபகாலமாக சட்டத்தை மாற்ற முயற்சிப்பது குழப்பம் ஏற்படுத்தும். 69வருட சுதந்திர இந்தியாவில் மரபுகளை திடீரென மாற்ற முயற்சிப்பது என்பது கங்கை,காவிரி நதி ஓடிவரும் திசையை மாற்றுவதற்கு ஒப்பானது.  டெல்லி தேர்தலில்  32சதவீதம் மட்டுமே பா.ஜ.க. வாக்குகளை பெற்றது. 68 சதவீதம் மக்கள் பா.ஜ.கவிற்கு எதிராகவே வாக்களித்தனர். நமது நாட்டில் 4635 வகுப்புகள் உள்ளன. அதேபோல் பல மதங்கள் உள்ளன. ஒவ்வொரு வகுப்புகளுக்கும் கொள்கை உள்ளது. பெரும்பான்மையான மக்கள் வாழும் நாட்டில் அந்த பெரும்பான்மையானவர்கள் சார்ந்திருக்கும் மதங்களுக்கு மாற்றம் முயற்சிப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிராக ஆகும். உலகில் 197 நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மைனாரிட்டி மக்களை மதமாற்றம் செய்ய கூறுவது என்பது உலகம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சனையை உருவாக்கும். மரபுகளை மாற்றுவது என்பது தவறு. நீண்ட கால மரபுகளாக நமது நாட்டில் மதசார்பின்மை உள்ளது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இருக்கிறது. எல்லா மதங்களையும் ஒரே மாதிரியாக இங்கு மரபாகி இருக்கிறது. அதற்கு தகுந்த மாதிரி மத்திய அரசு இருக்கவேண்டும்.

திராவிட பாரம்பரியம் என்பது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையை கொண்டதாக உள்ளது. இந்த மரபுகளை பாதுகாக்க கூடிய கட்சியாக திமுக இருக்கிறது என்றே நாங்கள் நம்புகிறோம்.  தேர்தலை வைத்து நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. அக்கட்சியின் கொள்கையை வைத்துதான் நாங்கள் அதனுடன் கூட்டணி வைத்துள்ளோம். வரும் 2016 தேர்தலில் திமுகவுடன் எங்கள் கூட்டணி தொடரும்.

ஜனநாயகத்திற்கு பலம் ஏற்பட விகிதாச்சார அடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும்.விகிதாச்சார முறைப்படி தேர்தல் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நடத்தப்படுகிறது. இதனால் பணம் பட்டுவாடா, வன்முறை, பலாத்காரம் நடைபெறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் பிரச்சாரம் செய்தால் விகிதாச்சாரப்படி தேர்தல் நடத்த முடியும்.இதனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடிய நிலை ஏற்படாது. வாக்காளர் அடிப்படையில் இல்லாமல் கட்சி அடிப்படையில் மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com