விருதுநகரில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக காணப்படும் புறவழிச்சாலைய சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியின் போது, மாற்றுப் பாதையாக சாத்தூர் பிரிவு சாலையில் இருந்து அல்லம்பட்டி வரையில் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவை எளிதாக சென்று வரும் வகையில் காமராஜர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது, இச்சாலையில் நகராட்சி பகுதிகளைச் சேர்ந்த பாத்திமாநகர், கட்டையாபுரம், முத்துராமன்பட்டி, சிவகாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சரக்கு வாகனங்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் அல்லம்பட்டியில் அமைக்கப்பட்ட ரயில்வே கேட் அகற்றப்பட்டு ரயில்வே துறை மூலம் சுரங்க வழிப்பாதை அமைக்கும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், பாலப்பகுதி அடியில் சரிசமமாக இல்லாமல் இருப்பதாலும், செங்குத்தாகவும் உயரமாகவும் இருக்கிறது. அதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவை தினறுகின்றன. மேலும், ஜல்லிகற்கள் வாகனங்களின் டயர்களில் குத்தி பழுதும் ஏற்படுகிறது. அதேபோல், மணல் தூசிகளாக பறப்பதால் குழந்தைகள், பெரியோர்கள் செல்ல முடியாத நிலையும், வாகன விபத்துக்களும் ஏற்படுகிறது.
இவ்வழிச்சாலையில் அதிகமாக துவரம், உழுந்தம் பருப்பு தொழிற்சாலைகள், எண்ணைய் ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் உள்ளதால் சரக்கு வாகனங்கள் எந்நேரமும் போக்குவரத்து உள்ள சாலையாக உள்ளது. மேலும், அல்லம்பட்டி, அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை சாலை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு எளிதாக சென்று வரும் வகையில் அமைந்துள்ளது. அதனால் இச்சாலையை தூசி பறக்காத நிலையில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணசாமி கூறுகையில், இச்சாலையை விருதுநகர் நகராட்சியின் 7 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களும், மாணவ மாணவிகள் என அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் பிரசித்த பெற்ற கோயில் திருவிழா நடைபெற இருக்கிறது. அதனால் அதிகம் பேர் இச்சாலையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையுள்ளது. அதனால் விரைவில் ரயில்வே சுரங்கப்பாதைக்கு கீழே சரிசமமாக நீர் வடிகால் வசதியுடன் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.