10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பு மையங்களின் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நாளில் வினாத்தாள்கள் கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்காக 10 வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அரசு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கட்டுக்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். இதற்காக மூத்த தலைமையாசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியரும் என ஒவ்வொரு மையத்திற்கும் 2 பேர் வீதம் 20 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் கே.வி.எஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி கல்வித்துறையின் இணை இயக்குநர் குப்புசாமி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பிட்ட வினாத்தாள் மையத்திற்கு எத்தனை தேர்வு மையங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் வினாத்தாள் கட்டுக்கள் வந்துள்ளதா என்பதை பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய வினாத்தாள் பதிவேடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பண்டல்களை சரிபார்க்க வேண்டும்.
அதில், ஏதாவது குறைவாக இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பி்ன்னர் வினாத்தாள் கட்டுக்களை எளிதில் உடைக்க முடியாத இரும்பு பீரோவில் 2 பூட்டுக்களால் பூட்டி சாவியை இருவரும் ஒவ்வொன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். அதையடுத்து, அம்மையத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வு நாளில் வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும் வினாத்தாள் கட்டுக்கள் தேர்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக சேர்ந்ததா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் கட்டுக்காப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் மூத்த தலைமையாசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.