விருதுநகர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிரான மா பூ பூத்த நிலையில் உள்ளதால் விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் உரங்கள் இட்டு மகசூலை அதிகப்படுத்த தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இது குறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சேத்தூர், சிவகாசி உள்ளிட்ட வட்டாரப் பகுதியில் தோட்டக்கலைப்பயிரான மா பயிரிட்டுள்ளனர். தற்போது, பூ பூத்த நிலையில் காணப்படுகிறது.
இதில், ஒரு சில மரங்கள் பூ பூக்காமல் காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் பூக்கள் சீரான முறையில் பூப்பதற்கு 1 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் யூரியா அல்லது நீரில் கரையும் பொட்டாட்சியம் நைட்ரேட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து இலைகள் நன்கு நனையும் படி காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
மேலும், காய் பிடிப்பை அதிகப்படுத்த 1 லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் பொட்டாட்சியம் நைட்ரேட் கரைசலை பிஞ்சுகள் கடுகளவில் இருக்கும் போது தெளிக்க வேண்டும். பூத்துள்ள மாமரங்களில் தத்துப்பூச்சியின் தாக்குதல் காரணமாக பூக்கள் பாதிக்கப்படும். தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த அசிபேட் 75 எஸ்பி என்ற பூச்சிக் கொல்லியை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் அல்லது பாசிலோன் 35 இசி மருந்தையும், கார்பரில் 50 டபிள்யுபி என்ற மருந்தை 2 கிராம் மருந்தையும், 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதை கடைபிடித்து விவசாயிகள் மா சாகுபடியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.