திருநெல்வேலியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் பொன்னையா (24). ஆட்டோ ஓட்டுநர். இவர், கடந்த 25 ஆம் தேதி வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் ஆட்டோவை வழிமறித்து பொன்னையாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த பொன்னையா, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையறிந்த பொன்னையாவின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கன்னியாகுமரி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தச்சநல்லூரில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அப்போது அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. இதில் 3 பேருந்துகளும், ஒரு லாரியும் சேதமடைந்தன. 6 வீடுகள், ஒரு ஆட்டோவும் சேதப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் பொன்னையாவின் ஆதரவாளர்கள் 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொலைவழக்கு தொடர்பாக தச்சநல்லூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த இசக்கி மகன் சக்திவேல் (42), அவரது சகோதர்களான மாரி என்ற மாரிமுத்து (38), இசக்கி முத்து என்ற குமார் (28) ஆகியோரை பாளையங்கோட்டை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மேலும், போலீஸாரால் தேடப்பட்டு வந்த சக்திவேலின் மற்றொரு சகோதரரான சின்னதுரை (34) அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். 3 ஆவது நாளாக போராட்டம்: பொன்னையாவின் உடலை வாங்க மறுத்து தேனீர்குளம் பகுதி மக்கள் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். செண்பகாதேவி அம்மன் கோயில் வளாகத்தில் ஆண்கள்-பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் து.பெ.சுரேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
கொலைசெய்யப்பட்டுள்ள பொன்னையாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள பொன்னையாவின் ஆதரவாளர்கள் 20 பேரை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் தச்சநல்லூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.