விருதுநகர் அருகே அம்மா திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், தாதம்பட்டி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில், ஆட்சியர் வே.ராஜாராமன் பங்கேற்று பேசுகையில், அரசின் திட்டங்களை பெறுவதற்காக கிராமங்களில் இருந்து தலைநகரங்களுக்கு வருகின்றனர். இதுபோன்ற அலைச்சலை தடுக்கும் வகையில் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும்.
இதற்காக வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மனுக்களை அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இக்கிராமத்தில் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் ஆய்வு செய்யப்பட்டு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு பரிசீலனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
அதையடுத்து பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக 77 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். உடனே அந்தந்த துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், பட்டா மாறுதல், பட்டா பெயர் மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா, சாதிசான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் உள்ளிட்ட தகுதியான மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்த முகாமில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, ஆதிராவிட நலத்துறை அலுவலர் சின்னம்மாள், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.