போலி ஆவணம் தயாரித்து ரூ.41 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீது பஜார் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(44). இவர் தனது தேவைக்காக தென்காசி ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜான் அமல்ராஜூடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இக்கடனுக்கு ஆதாரமாக சென்னையில் உள்ள தனது சொத்தின் பவர் பத்திரம் மற்றும் தொகை குறிப்பிடாத காசோலையையும் கொடுத்திருந்தாராம். இந்நிலையில், கடந்தாண்டு சக்திவேல் கடன் பணத்தை ஜான் அமல்ராஜூடம் கொடுத்துள்ளார். அப்போது, பவர் பத்திரத்தை மட்டும் கொடுத்துள்ளார். இதற்கிடையே மீண்டும் ஜான் அமல்ராஜ் பவர் பத்திரம் போலியாக தயாரித்து ரூ.41 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு தரமுடியாது எனக் கூறி சக்திவேல் எதிர்ப்பு தெரிவி்த்தாராம்.
இதற்கிடையே விருதுநகர் ஆவலப்பகோவில் தெருவைச் சேர்ந்த நண்பரான திரவியம் மூலம் காசோலையை கொடுத்து அதில் ரூ.41 லட்சம் பணம் நிரப்பி வங்கியில் கொடுத்ததில் பணமின்றி திரும்பி வந்துள்ளது. இது தொடர்பாக சக்திவேல் மீது பண மோசடி செய்ததாக தென்காசி காவல் நிலையத்தில் ஜான் அமல்ராஜ், திரவியம் ஆகியோர் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணைக்கு அழைத்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதைத் தொடர்ந்து சக்திவேல் விருதுநகர் ஜே.எம்.நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரணை செய்த நீதிபதி பாலகிருஷ்ணன் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தினர் ஜான் அமல்ராஜ், திரவியம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.