திருச்செந்தூரில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை: 6 பேர் கும்பல் கைது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த பெண்கள் உள்பட 6 பேர் கும்பல் புதன்கிழமை


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த பெண்கள் உள்பட 6 பேர் கும்பல் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள கே.வெள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை மகன் சரண் (4). இவர், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கடந்த 1 ஆம் தேதி மாயமானார். இதேபோல திருச்சி மாவட்டம் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகள் அஸ்வினி (இரண்டரை). இவர், கடந்த 3 ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் மாயமானார். இந்த இரு புகார்கள் தொடர்பாக திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்செந்தூரில் மாயமான குழந்தைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சுமித்சரண் அறிவுரையின்பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.என்.நரேந்திரன்நாயர் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் திருச்செந்தூரில் மாயமான சரண், அஸ்வினி ஆகியோர் முறையே திருநெல்வேலி மாவட்டம் வேலப்பநாடானூரைச் சேர்மன், ராமர் ஆகியோரிடம் இருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று குழந்தைகளை மீட்டனர்.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.என்.நரேந்திரன்நாயர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
திருச்செந்தூரில் மாயமான சரண், அஸ்வினி ஆகியோரை குழந்தையில்லாத தொழிலாளர்களான சேர்மன், ராமர் ஆகியோரிடம் ஒரு கும்பல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் நடத்திய விசாரணையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் சிக்கியது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம், மேலராமன்புதூரைச் சேர்ந்த முத்து மனைவி ராஜம்மாள் (50), சிவநாடானூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தங்கப்பாண்டி (55), சுரண்டையைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகன் பரமசிவன் (39), அவரது மனைவி லட்சுமி (30), அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அழகப்பன் மனைவி மீனா (47), கோவை மாவட்டம் பல்லடத்தில் வசித்து வரும் கீதா (42) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர்.
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளை ராஜம்மாள் கடத்தி வந்ததும், அதன்பின்பு மற்றவர்கள் தரகர்களாகச் செயல்பட்டு குழந்தையில்லாத தம்பதிகளிடம் குழந்தைகளை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. அந்தக் கும்பலிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் மாயமான விருதுநகர் மாவட்டம் அனையூரைச் சேர்ந்த கண்ணன் மகள் மனிஷா (3) மற்றும் பெற்றோர் விவரம் தெரியாத ஒரு ஆண் குழந்தையையும் கடத்தி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டுள்ள அனைத்து குழந்தைகளும் திருநெல்வேலியில் உள்ள சரணாலயம் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தனிப்படையினரிடம் சிக்கிய அனைவரும் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தொடர் விசாரணை மற்றும் வழக்கு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தாரே செய்ய உள்ளனர்.
ஆபரேஷன் ஸ்மைல்:திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டில் 50 குழந்தைகள் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 43 குழந்தைகள் விசாரணையின் முடிவில் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 7 வழக்குகள் விசாரணையில் உள்ளன. குழந்தைகள் கடத்தலைத் தடுக்கவும், கும்பலைப்பிடிக்கவும் மாநில அளவில் உருவாக்கப்பட்டுள்ள ஆபரேஷன் ஸ்மைல் திருநெல்வேலி மாவட்டத்தில் 2 காவல் ஆய்வாளர்கள் உள்பட 15 போலீஸார் அடங்கிய தனிப்படையினருடன் செயல்பட்டு வருகிறது. இப்போதைய குழந்தைகள் மீட்பு நடவடிக்கையும் ஆபரேஷன் ஸ்மைலின் ஒருபகுதிதான். இதுதவிர குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவும் மிகவும் விழிப்போடு செயல்பட்டு வருகிறது. இந்தப்பிரிவின் அறிக்கைகள் மாதந்தோறும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. கடத்தப்பட்ட குழந்தைகளை குழந்தையில்லாத தம்பதிகள் வாங்குவது சட்டப்படிக் குற்றமாகும். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியைத்தொடர்ந்து தனிப்படையில் பணியாற்றிய சேரன்மகாதேவி காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர், சேர்ந்தமரம் காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ், தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், துரைச்சாமி, திருமலைநம்பி, அசோகன் உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...