வாழ்த்து அட்டை முன்பு போல அதிகமில்லை; ஆனாலும், விற்பனைக்குப் பாதிப்பில்லை

வாழ்த்துகளைப் பரிமாற இணையதளம், செல்போன் போன்ற தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்ட போதிலும், இன்னமும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாக வாழ்த்துகளைப் பரிமாறி கொள்பவர்கள் இருப்பதை அதன் விற்பனை உணர்த்துகிறது.
வாழ்த்து அட்டை முன்பு போல அதிகமில்லை; ஆனாலும், விற்பனைக்குப் பாதிப்பில்லை
Published on
Updated on
1 min read

வாழ்த்துகளைப் பரிமாற இணையதளம், செல்போன் போன்ற தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்ட போதிலும், இன்னமும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாக வாழ்த்துகளைப் பரிமாறி கொள்பவர்கள் இருப்பதை அதன் விற்பனை உணர்த்துகிறது.

விழாக் காலங்களில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாக வாழ்த்துச் சொல்லும் பழக்கம் இருந்து வந்தது.

இணையம், செல்போன் பயன்பாடு அதிகரிப்புக்கு பிறகு, நாம் விரும்பும் வகையிலான வாழ்த்து வடிவத்தை தயார் செய்து உடனடியாக அனுப்பும் வசதி, செல்போன் மூலம் வாட்ஸ் அப், டெலிகிராப், சமூக வலைத்தளங்களான முகநூல், சுட்டுரை போன்றவற்றின் மூலமாகவும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது அதிகரித்து வருகிறது. ஆனாலும், வாழ்த்து அட்டைகள் மூலம் வாழ்த்து சொல்லும் வழக்கத்தை இன்றும் சிலர் தொடர்ந்து வருகின்றனர். இதைத்தான் வாழ்த்து அட்டை விற்பனை உறுதிப்படுத்துகிறது.

ரூ.10 முதல் ரூ.40 வரையிலான விலைகளில்: தமிழர் திருவிழா எனப்படும் பொங்கலை வரவேற்கும் விதமாக பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில் அச்சிடப்பட்ட பொங்கல் வாழ்த்து அட்டைகள் ரூ.10 முதல் ரூ.40 வரையிலான விலைகளில் கிடைக்கிறது. இதைத் தவிர பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையிலான வாழ்த்து அட்டைகள் ரூ.20 முதல் ரூ.300 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன.

நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில்தான் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகளவில் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விழா காலங்களில் ரூ. 4000 முதல் ரூ.5000 வரையிலான விற்பனை நடைபெற்றது. நான் 2 பேருக்கு வேலைவாய்ப்பும் அளித்து விற்பனை செய்து வந்தேன்.

தற்போது முன்பு போல அதிகளவில் வியாபாரம் இல்லை என்றாலும், முழுமையான பாதிப்பு இல்லாமல், குறிப்பிடத்தகுந்த அளவில் வியாபாரம் இருந்து வருகிறது. சீசன் காலத்தில் கிடைத்த வருமானம் சரி பாதியாக குறைந்துவிட்டது என்கிறார் தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் அருகே வாழ்த்து அட்டைகள் விற்பனையில் கடந்த 36 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள எஸ். ஞானப்பிரகாசம்.

பொங்கல் பண்டிகை விற்பனைக்கு இணையாக காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்பனையும் இருந்து வருகிறது. கடந்த ஆண்டைப் போல நிகழாண்டிலும் விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கிறேன். முன்பு வாழ்த்து அட்டைகளை மட்டுமே விற்பனை செய்து வந்த நான், தற்போது சிறுவர்களுக்கான பாடல்கள், படங்கள், விலங்குகள், பழங்கள், பூக்கள், கார்ட்டூன் புத்தகங்களையும் விற்பனை செய்யத் தொடங்கி விட்டேன் என்கிறார் ஞானப்பிரகாசம்.

அதேநேரத்தில், பெரு வணிக வளாகங்களில் வாழ்த்து அட்டைகள் விற்பனை பிரிவு தனியே செயல்பட்டாலும், எதிர்பார்த்த அளவில் விற்பனை இல்லை என்று வணிக வளாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com