அகதிகள் முகாம்களில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் இருந்தால் தகவல் கூற கடலோர பாதுகாப்பு படை அறிவுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் இருந்தால் அது தொடர்பான தகவலை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் படி கடலோர பாதுகாப்பு படை தலைவர் தெரிவித்தார். 
அகதிகள் முகாம்களில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் இருந்தால் தகவல் கூற கடலோர பாதுகாப்பு படை  அறிவுறுத்தல்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் இருந்தால் அது தொடர்பான தகவலை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் படி கடலோர பாதுகாப்பு படை தலைவர் தெரிவித்தார். 

தமிழக கடலோர பாதுகாப்பு காவல் படை தலைவர் கே.சொக்கலிங்கம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்வதற்காக சனிக்கிழமை வருகை தந்தார். அதற்கு முன்பாக இம்மாவட்டத்தில் செயல்படும் குல்லூர்சந்தை, ஆணைக்குட்டம் உள்ளிட்ட இலங்கை அகதிகள் முகாம்களுக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  முகாம்களில் இருந்து அனுமதியின்றி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்வதால் ஏற்படும் பின்விளைவு குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

அதையடுத்து மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்தார். காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில், கடலோர பாதுகாப்பு காவல் படை தலைவர்  பங்கேற்று பேசுகையில், அதிகாரிகள் இலங்கை அகதிகள் முகாமிற்கு அடிக்கடி சென்று ஆய்வு செய்வதோடு, அங்கு தங்கிருப்பவர்களின் விவரங்கள் முழுவதையும் பதிவேடுகளில் சரிபார்க்க வேண்டும்.

எவ்வித முன்னறிவிப்பின்றி வெளிநாடுகளுக்கு விசைப்படகுகளில் தப்பிச் செல்வதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அகதிகள் வட்டாட்சியர் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். அதேபோல், முகாம் பகுதிகளில் இரவு நேரங்களில் சந்தேகப்படும் நபர்கள் குறித்து க்யூ பிரிவு போலீஸார், தனிப்படை காவல் காவலர்கள் ஆகியோர் கண்காணித்து உடனே கடலோர பாதுகாப்பு காவல் துறை அலுவலகம், மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம், காவல் துறை, அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வாஹா, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் சுபாநந்தினி, தனிவட்டாட்சியர்(அகதிகள்), வட்டாட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், க்யூ பிரிவு துறையினர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com