விருதுநகர் மாவட்டத்தில் இன்று 1.64 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)5 வயதிற்குள்பட்ட 1.64 லட்சம் குழந்தைகளுக்கு 1068 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:1 வயது குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்டவர்கள் போலியோவால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இம்மாவட்டத்தில் விருதுநகர் மற்றும் சிவகாசி சுகாதார மாவட்டங்களில் 1068 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 487 மையங்களில் 61 ஆயிரத்து 333 குழந்தைகளுக்கும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 581 மையங்கள் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 17 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன. மேலும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள், ஊட்டச்த்து மையம், பள்ளிகள், சமுதாய கூடங்கள் மற்றும் திருக்கோயில் வளாகங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை 5 மணி வரையில் வழங்கப்பட இருக்கிறது.
இப்பணியில் மொத்தம் 4452 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 31 நடமாடும் குழுக்கள் அமைத்து அகதிகள் முகாம், நரிக்குறவர்கள், தாற்காலிகமாக குடிசைகளில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சொட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழா நடைபெறும் இடங்கள், திருமண அரங்குகளில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 41 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. போலியோ இல்லாத உலகம் படைக்க இம்முகாமை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
