ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.கவின் மாநில செயலாளர் தமிழிசைசௌந்தராஜன் தெரிவித்தார்.
விருதுநகரில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் செவ்வாய்கிழமை மாலையில் நடைபெறும் பஜனை, தியான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்தார். அவரை விருதுநகர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் வரவேற்றனர்.அதையடுத்து, பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசைசௌந்தராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தர்மபுரி-ஓகேனக்கல் நோக்கிச் சென்ற அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர்களுக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். எனவே காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தேவையான தகவல்களை சிறப்பு அலுவலர்கள் மூலம் தெரிவி்ககவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தற்போது, ஆளுங்கட்சியின் கவனம் எல்லாம் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலேயே இருக்கிறது. அங்கு 27 அமைச்சர்கள் குழுவினர் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இத்தொகுதியில் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுவது தொடர்பாக 2 நாள்களுக்குள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் அனைவரும் கலந்தாய்வு செய்யப்படும். அதன் அடிப்படையிலேயே வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும். எனவே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் தமிழகத்தில் திமுக-அதிமுகவிற்கு மாற்றாக பா.ஜ.க வளர்ந்து வருகிறது. அதற்கு பொதுமக்களும் ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.