விருதுநகர் அருகே நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த 6 சவரன் நகையை பறித்து தப்ப முயற்சிக்கையில் பொதுமக்கள் வந்ததால் ஏற்கனவே திருடிய நகைகளையும், இருசக்கர வாகனத்தையும் போட்டு விட்டு மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர்.
விருதுநகர் அருகே எம்.எப் சாலைப் பகுதியைச் சேர்ந்த பருப்பு வியாபாரி ராஜசேகரனின் மனைவி செல்வமணி(49). இவர் அப்பகுதியில் உள்ள மண்ணெண்ணெய் விநியோக மையத்தில் புதன்கிழமை மண்ணெண்ணெய் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்றாராம். வீட்டுக்கு சென்றதும் திறவுகோலால் கதவை திறக்க முயற்சிக்கையில், அந்த இடத்தில் பைக்கில் நின்று கைப்பேசியில் பேசிக் கொண்டு இருந்த 2 மர்ம நபர்கள் திடீரென செல்மணியின் கழுத்தில் கிடந்த 6 சவரன் நகையை பறிக்க முயற்சித்தனர்.
அப்போது, மர்ம நபர்களுடன் நகையை பறிக்க விடாமல் போராடி அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் சத்தம் போட்டு உதவிக்கு அழைத்துள்ளார். அதற்குள் நகையை பறித்துக் கொண்டு பைக்கில் ஏறி திரும்பும் போது கற்களில் இடறி கீழே விழந்த நிலையில் பொதுமக்கள் கூட்டமாக வருவதை அறிந்து அவசரத்தில் எழும் போது அந்த இடத்திலேயே திருடிய நகைகளையும், பைக்கையும் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக செல்வமணி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த இடத்தில் விட்டுச் சென்ற பைக்கில் போலீஸ் என எழுதப்பட்டிருந்தது குறித்தும், யாருக்கு சொந்தமானாது என்பது குறித்தும் விசாரித்தனர்.
அதில், நகையை பறித்துக் கொண்டு தப்பியோடியவர்கள் சி.ஆர்.பி.எப் போலீஸாராக வேலை பார்த்து வெளியேறிய விருதுநகர் புதுத்தெருவைச் சேர்ந்த முருகன்(35) மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த குமார்(27) என்பதும் தெரியவந்தது. இவர்கள் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.