மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்பதை வலியிறுத்தி திங்கள்கிழமை விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி மற்றும் அவரது தந்தையையும் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தனின் மகள் நந்தினி. இவர் சட்டக்கல்லூரி மாணவியாவர். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தையும், மகளும் சைக்கிளில் சென்று மது பழக்கத்தால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல், இவர்கள் இருவரும் கடந்த 12-ம் தேதி சைக்கிளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்திய பதாகைகளுடன் விருதுநகர் வீதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, குடியரசு தினநாளன்று தனது தந்தையுடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஏற்கனவே சட்டக்கல்லூரி மாணவி நந்தினி அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தி்ல விழிப்புணர்வு பதாகைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் தந்தையும், மகளும் ஈடுபட முயற்சித்தனர். அப்போது, அங்கு விரைந்து வந்த போலீஸார் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரையும் கைது செய்து மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.