சுற்றுச்சூழல் விருது பெற தனிநபர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் விருதை அரசு வழங்கி வருகிறது.அதேபோல், 2014-க்கான விருது பெற குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் தனிநபராக இருந்தால் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் தனிநபர், நிறுவனம் செய்த பணிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். தனிநபர் எந்த நிறுவனத்திலும் பணி புரிபவராக இருக்காமலும், ஆனால் ஓய்வு பெற்ற பின் தனிநபர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தால் விண்ணப்பிக்க தகுதியுடையவர்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச் சார்ந்த பிரசுரங்கள், பத்திரிக்கை குறிப்புகள், திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள் பங்குபெற்றோரின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இடம் பெறுவது அவசியம். குறிப்பிட்ட 3 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஏற்கனவே சுற்றுச்சூழல் விருது பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கூடாது. இதேபோல், சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை ஊக்குவிக்கும் வண்ணம் தனிநபர் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டோர் உருவாக்கிய சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தரமான ஆராய்ச்சி ஏடுகளில் பிரிசுரம் செய்திருக்க வேண்டும். ஆங்கில கட்டுரை என்றால் கட்டாயம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக எந்த ஆராய்ச்சி ஏடுகளில் பிரசுரம் செய்யப்பட்டது என்ற விவரத்தை அளிக்கவும் வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் வருகிற பிப்.2ம் தேதி முதல், தொடர்ந்து 25-ம் தேதி வரையில் இந்த அலுவலக இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 3 புகைப்படங்களுடன், ரூ.100 கேட்பு காசோலையுடன் இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரை தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-600015 என்ற முகவரிக்கு வருகிற 27-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.