விருதுநகர் அருகே அனுமதியின்றி டிராக்டர்கள், லாரிகளில் செம்மண் கடத்தும் கும்பல்:  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

எவ்வித அனுமதியின்றியும் டிராக்டர் மற்றும் லாரிகளில் ஜே.சி.பி வாகன உதவியுடன் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பலால், அப்பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர்
விருதுநகர் அருகே அனுமதியின்றி டிராக்டர்கள், லாரிகளில் செம்மண் கடத்தும் கும்பல்:  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
Updated on
2 min read

எவ்வித அனுமதியின்றியும் டிராக்டர் மற்றும் லாரிகளில் ஜே.சி.பி வாகன உதவியுடன் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பலால், அப்பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் நிலையேற்பட்டுள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது நதிக்குடி கிராமம். இக்கிராமத்தில் 350 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அதற்கு அருகே 180 ஏக்கர் பரப்பளவில் கண்மாயும் உள்ளன. கால்நடைகளுக்கான இந்நிலத்தை நம்பி் நதிக்குடி, ஆத்தூர், சுப்பிரமணியாபுரம், மம்சாபுரம், திருவேங்கடாபுரம், பாரைப்பட்டி, துளுக்கன்குளம், இடையன்குளம், மேட்டுப்பட்டி, புளியம்பட்டி, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதி செம்மண் வளம் நிறைந்தவை என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில் வேம்பு, தேக்கு, நாவல், புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது, நன்றாக வளர்ந்து அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்நிலையில், எவ்வித அனுமதியின்றியும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இரவு நேரங்களில் ஜே.சி.பி வாகன உதவியுடன் செம்மண் உள்ள பகுதியில் மரங்களை வேரோடு சாய்த்து, பின் டிராக்டர் மற்றும் லாரிகளில் கடத்திச் செல்கின்றனர். கிராமத்தினர்  தகவலறிந்து வந்தாலும் அதற்குள் அந்த இடத்திலிருந்து சென்று விடுகின்றனர்.

தற்போது, மேய்ச்சல் நிலப்பகுதியில் கால்வாய் வரத்துக்கள் சமமாக இல்லாத காரணத்தாலும், பள்ளங்களாக இருப்பதாலும் அருகில் உள்ள கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லை. கிராமங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் ஆதாரமாக இக்கண்மாய் உள்ளது. எனவே தொடர்ந்து செம்மண் கடத்தப்படுவதால் விவசாயம்,  குடிநீர் ஆதாரம் பாதிப்புக்கு உள்ளாகும் என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கிராம தலைவரும், விவசாயியுமான மதியழகன் என்பவர் கூறுகையில், இந்த மேய்ச்சல் நிலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் அதிகமாக செம்மண் அள்ளி 20-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு கடத்துகின்றனர். இந்நிலப்பகுதியில் உள்ள மரங்களையும் வேரோடு சாய்த்து விடுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் கண்மாய்க்கு நீர் வரத்தும் குறைந்து வருவதால் கிணறுகளிலும் நீர் ஆதாரம் இல்லாமல் விவசாயமும் பாதிப்புள்ளாகியுள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வனத்துறையிடம் பல்வேறு முறை புகார் மனு அளித்துள்ளோம். இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேய்சசல் நிலத்தை பாதுகாக்க கம்பிவலை அமைத்தும், இரவு நேரங்களில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை மூலம் ரோந்து பணி செய்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் காப்புக்காடுகள் மட்டுமே இத்துறையின் நேரடி கட்டுபாட்டில் வரும். மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் பசுமையாக்கும் வகையில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்டன. மாவட்ட நி்ர்வாகம் தான் மணல் கடத்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com