ஆவின் மூலம் கொள்முதலை அதிகரிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதலை அதிகரிக்க கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கிளை சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதலை அதிகரிக்க கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கிளை சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தனியார் பால் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு, அரசு நிர்ணயித்ததைவிட குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து பால்கொள்முதல் செய்வற்கு எதிர்ப்பு தெரிவித்து பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர் பி.கணேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பால்உற்பத்தியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலர் ஆ.ராஜரத்தினம் சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியது:

 திண்டுக்கல் மாவட்டத்தில், நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 65ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே, ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை ரூ.15க்கு கொள்முதல் செய்கின்றன. அதேநேரத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.24க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
 சேமிப்பு கிடங்கி வசதி இல்லாததை காரணமாக கூறி, கடந்த 20 ஆண்டு காலமாக ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை அதிகப்படுத்தவில்லை. பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில், தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

 இதனால், விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில், ஊராட்சிக்கு ஒரு ஆவின் நிறுவனம் தொடங்க கொள்முதலை அதிகரிக்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, ஆவின் மூலம் பால் விநியோகம் செய்ய வேண்டும். மானிய விலையில் மாட்டுத் தீவனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

 இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள், பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, பாலை கொட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பால்உற்பத்தியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலர் ஆ.ராஜரத்தினம், மாவட்ட விவசாயிகள் சங்க செயலர் சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வசந்தாமணி, விவசாயிகள் சங்க ஒன்றியக் குழு செயலர் தயாளன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com