திருநள்ளாறு அருகே தொழிற்சாலை கேண்டீனில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 45 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
திருநள்ளாறு பகுதியில் ஜோதி லெபாரட்டரிஸ் என்கிற தனியார் தொழிற்சாலை உள்ளது. ஆலை வளாகத்தில் கேண்டீன் செயல்படுகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்கள் அதனை பயன்படுத்துவருகின்றனர். திங்கள்கிழமை காலை ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் கேண்டீனில் பொங்கல், சாம்பார் வாங்கி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட பெரும்பாலானவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் தேனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேருக்கு பாதிப்பு அதிகமாக இருந்ததால், உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனனர். மற்றவர்களை புறநோயாளியாக சிகிச்சை அளித்து அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, பொங்கல், சாம்பார் சாப்பிட்டபோது, சாம்பாரில் பல்லி இருந்தது பின்னர் தெரியவந்தது. இதனை சாப்பிட்ட அனைவருக்குமே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மற்ற தொழிலாளர்கள் துணையுடன் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டோம், ஆலையில் உள்ல கேண்டீனில் வழங்கப்படும் உணவு சுகாதாரமானதாக இருப்பதில்லை., சாப்பாடு அளவும் மிக குறைவாக இருக்கிறது. இதுகுறித்து பொறுப்பாளரிடம் கூறினால் பொறுப்பில்லாமல் பதில் கூறி அலட்சியப்படுத்துகின்றனர் என்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆர்.கமலக்கண்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, திருநள்ளாறு பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் குறித்தும், ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அவதியுறுவது குறித்தும் பல்வேறு கட்டங்களில், ஆட்சியர், அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு ஆய்வும் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. தவறுகள் கண்டறிந்து தண்டிக்கப்படுவதில்லை. தவறுகளை செய்வோருக்கு திருநள்ளாறு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரின் ஆதரவு இருப்பதால், தவறுகள் நடந்துகொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் வரக்கூடிய பேரவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.