தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
திருச்சுழி அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சியைச் சேர்ந்தது டி.கரிசல்குளம் கிராமம். விவசாய வேலை எதுவும் இல்லாத காலங்களில் பொதுமக்களுக்கு வேலை அளிப்பதற்காகவே தேசிய ஊரக உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் வேலை செய்ய திறனுள்ள ஒவ்வொருவருக்கும் கடந்தாண்டு வரையில் 100 நாள்கள் என்ற அளவில் இருந்ததை, நிகழாண்டு முதல் 150 நாள்கள் வரையில் வேலை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, இக்கிராமத்தில் விவசாய வேலைகள் இல்லாமல் மிகவும் வறுமையில் இருந்து வருகிறோம். இந்நிலையில், எங்கள் கிராமத்திற்கு மட்டும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க மறுக்கின்றனர். இதுவரையில், கடந்த 2012-2013ல் 20 நாள்களும், கடந்த ஆண்டில் 15 நாள்களும் மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். நிகழாண்டில் இத்திட்டத்தில் வேலை அளிக்கப்படாத நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் சென்று முறையிட்டாலும் நிதி குறைவாக உள்ளதாக கூறுகின்றனர். அதிலும், ஒருநாளுக்கு ரூ.113 என கூலியையும் குறைவாகவே வழங்குகின்றனர்.
ஆனால், இதே ஊராட்சியில் உள்ள பிள்ளையார்நத்தம் மற்றும் பனையூர் கிராமங்களில் நாள்தோறும் இப்பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், இத்திட்டத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வேலை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.