

ஆதார் அட்டைக்கு பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை வருவாய்த்துறையினர் வழங்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பதால் இலவசமாக கிடைக்கக்கூடிய இந்த விண்ணப்பங்களை பொதுமக்கள் ஜெராக்ஸ் கடைகளில் காசு கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு கடந்த 2011.ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் பொதுமக்களுக்கு அவர்களின் விரல்ரேகை, கருவிழி பதிவு, புகைப்படத்துடன் கூடிய ஆதார் அடையாள அட்டையை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க பலரும் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது மத்திய அரசு சமையல் எரிவாயு உள்ளிட்ட அரசின் மானியங்களைப் பெற ஆதார் அட்டை அவசியம் என்று வலியுறுத்தி வருவதால் பொதுமக்கள் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க ஆர்வமாக உள்ளனர்.
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கச் செல்லும் போது, கடந்த 2011.ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட அத்தாட்சி சீட்டை கொண்டு செல்ல வேண்டியது அவசியம். இதனால் இதுவரை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது விடுபட்டு பதிவேட்டில் பதிவு செய்யாதவர்கள், ஆதார் அட்டை பெற முடியாமல் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டனர்.
இதையடுத்து, தேசியமக்கள் தொகை கணக்கெடுப்பின் போது விடுபட்டவர்களுக்கு புதிதாக விண்ணப்பம் கொடுத்து, அதனை பூர்த்திசெய்து வாங்கி, கணிணியில் பதிவு செய்த பின்னர் குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடு்க்க அறிவுறுத்தியிருந்தது.
இதன்படி, பேரூராட்சி, கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். ஆனால் களக்காடு சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படாததால் ஜெராக்ஸ் கடைகளில் ரூ.6 முதல் 8 வரை கொடுத்து விண்ணப்பங்களை வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு வாங்கிச்செல்லும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாமல் கிராமப்புற மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு இலவசமாக ஆதார் அட்டை புகைப்படம் எடுப்பதற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு விண்ணப்பப் படிவம் கிடைக்கவும், அதனை பூர்த்தி செய்ய தகுந்த வருவாய்த்துறையினர் உதவிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.